பித்அத் பற்றிய ஆய்வு – பகுதி 4

மூன்றாம் பாடம்:

இந்த சந்தேகத்திற்குரிய பதில்:

நிச்சயமாக இவ்வம்சங்களுக்கு ஷரீஅத்தில் அடிப்படை உண்டு, இது நூதனமல்ல. இது நல்ல பித்அத்தாகும் என்று உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் கூற்றாகின்றது பித்அத் என்பது வார்த்தை ரீதியான அர்த்தமே தவிர, மார்க்க ரீதியான நாட்டமல்ல, இதற்கு ஷரீஅத்தில் அடிப்படை உண்டு. இந்த பித்அத் என்ற வார்த்தை பாஷை ரீதியானதே தவிர, ஷரீஅத் ரீதியானதல்ல, ஏனெனில் நிச்சயமாக பித்அத் என்பது ஷரீஅத்தில் ஏற்படுத்தப்படுவதாகும், அதற்கு ஷரீஅத்தில் எந்த அடிப்படையும் இருக்க மாட்டாது, அல்குர்ஆன் ஒரே வேதமாக ஒன்று சேர்கப்பட்டதற்கு ஷரீஅத்தில் அடிப்படை காணப்படுகின்றது. நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்குர்ஆனை எழுதுவதற்கு கட்டளையிட்டார்கள். என்றாலும் பல வகையிலேயே எழுதப்பட்டிருந்தது அதன் பாதுகாப்பிற்காக நபித்தோழர்கள் தான் அல்குர்ஆனை ஒன்று சேர்த்தார்கள்.

இன்னும் தராவீஹ் தொழுகையைப் பொருத்தவரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்ககள் நபித்தோழர்களுக்கு சில இரவுகள் தொழுகை நடத்தினார்கள். பர்ளாக்கப்பட்டு விடுமோ என்ற பயத்தின் காரணமாகவே நபியவர்கள் பின்வாங்கினார்கள், நபியவர்களின் காலத்தில் ஸஹாபாக்கள் பல அமைப்பில் பிரிந்து இத்தொழுகையைத் தொழுது வந்தார்கள், நபியவர்களின் மரணத்தின் பின்னர் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு இமாமின் தலைமையில் மக்களை நபியவர்களின் காலத்தில் தொழுது வந்தது போன்று ஒன்றிணைத்தார்கள், இது மார்க்கத்தில் பித்அத் ஆக மாட்டாது.

இன்னும், நபிமொழிகளை எழுதிய விடயங்களுக்கும் ஷரீஅத்தில் அடிப்படை உண்டு சில ஸஹாபாக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நபியவர்கள் ஹதீஸ்களை எழுதுவதற்கு கட்டளையிட்டார்கள். அல்குர்ஆனுடன் கலந்து விடும் என்ற அச்சத்தின் காரணமாக ஒரே அமைப்பில் எழுதுவதற்கு நபியவர்கள் எச்சரித்தார்கள். நபியவர்கள் வபாத் ஆன போது இந்த எச்சரிக்கை நீங்கிவிட்டது. ஏனெனில், நிச்சயமாக அல்குர்ஆன் பரிபூரணப்படுத்தப்பட்டு விட்டது மற்றும் நபியவர்களின் மரணத்திற்கு முன்னரே அது உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. எனவே, ஸூன்னாவின் பாதுகாப்புக் கறுதி முஸ்லிம்கள் ஸூன்னாவைக் கோர்வை செய்தார்கள். தங்களின் இறைவனின் வேதத்தையும், தங்களின் நபியின் வழிமுறைகளையும் இழந்து விடாமலிருக்க பாதுகாத்த இந்ந நபித்தோழர்களுக்கு இஸ்லாம் சார்பாகவும் முஸ்லிம்கள் சார்பாகவும் அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக!

இன்ஷா அல்லாஹ் தொடரும்

by: ABU MUAAD JAMALUD DEEN (GHAFOORI)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *