பித்அத் பற்றிய ஆய்வு – பகுதி 6

بسم الله الرحمن الرحيم

பித்அத்வாதிகள் குறித்து இஸ்லாமிய உம்மத்தின் நிலைப்பாடும், அவர்களுக்கு மறுப்பளிப்பதில் அஹ்லுஸ்ஸூன்னா வல்ஜமாஅத்தினரின் போக்கும்

பித்அத்வாதிகள் குறித்து அஹ்லுஸ்ஸூன்னா வல்ஜமாஅத்தினரின் நிலைப்பாடு

அஹ்லுஸ்ஸூன்னா வல்ஜமாஅத்தினர் தொடர்ந்தும் பித்அத்வாதிகளுக்கு மறுப்பளித்தவண்ணமும், அவர்களின் பித்அத்களை புறக்கணித்த வண்ணமும், அவர்களின் முயற்சிகளைத் தடுத்த வண்ணமும் இருக்கின்றனர். அதற்கு சில முன்னுதாரணங்களாவன:

உம்முத்தர்தா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: அபுத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் என் மீது கோபமான நிலையில் நுழைந்தார்கள், உங்களுக்கு என்ன நேர்ந்தது என நான் அவரிடம் கேட்டேன், அதற்கவர் அல்லாஹ் மீது ஆணையாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தவர்களிடமிருந்து அவர்கள் கூட்டாகத் தொழுவதைத் தவிர நான் அறியவில்லை என்றார்கள்.  புகாரி 650

அம்ர் பின் யஹ்யா என்பவர் அவரின் தந்தை கூறியதைச் செவியுற்றதாகக் கூறுகின்றார்: ளுஹர் தொழுகைக்கு முன் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் வாசலில் உட்கார்ந்திருந்தோம், அப்போது அவர் தன் வீட்டைவிட்டு வெளியேறிச் சென்றார் நாமும் அவருடன் பள்ளிவாசலுக்கு சென்றோம், எம்மிடத்தில் அபூ மூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வந்து உங்களிடம் அபூ அப்திர்ரஹ்மான் வந்தாரா? என்றார்கள். நாம் இல்லை என்றோம், எனவே அவர் வரும் வரை எங்களுடன் அவர்கள் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் அபூ அப்திர்ரஹ்மான் வெளியில் வந்த போது அவரிடத்தில் அனைவரும் சென்றோம். அவர்களுக்கு அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : அபூ அப்திர்ரஹ்மானே! நிச்சயமாக தற்போது நான் வெறுக்கத்தக்க ஒரு காரியத்தைக் கண்டேன். நலவைத் தவிர வேறு எதனையும் நான் காணவில்லை என்றார். அப்போது அது என்ன? என்று அவர்கள் கேட்டார்கள். நீர் வாழ்ந்தால் அதனைக் காண்பீர் என்றார்கள். நான் பள்ளிவாசலில் ஒரு கூட்டத்தாரைக் கண்டேன், அவர்கள் வட்டமாக அமர்ந்தவர்களாக தொழுகையை எதிர் பார்த்திருந்தார்கள். ஒவ்வொரு குழுவிலும் ஒரு மனிதர் தலைவராக இருந்தார், அவர்களின் கைகளில் பொடிக்கற்கள் காணப்பட்டன. அம்மனிதர் 100 தடவை தக்பீர் சொல்லுங்கள் என்கிறார், அவர்கள் 100 தக்பீர் கூறுகிறார்கள். அவர் 100 தடவை லாஇலாஹ இல்லல்லாஹ் கூறுங்கள் என்கிறார், அவர்கள் 100 முறை லாஇலாஹ இல்லல்லாஹ் கூறுகிறார்கள். அவர் 100 ஸூப்ஹானல்லாஹ் கூறுங்கள் என்கிறார், அவர்கள் 100 ஸூப்ஹானல்லாஹ் கூறுகிறார்கள். அப்போது நீங்கள் அவர்களுக்கு என்ன சொன்னீர்கள்? என்று கேட்டார்கள். நான் உங்கள் அபிப்பிராயத்தை அல்லது உங்களது தீர்ப்பை எதிர்ப்பார்த்து எதுவும் கூற வில்லை என்று அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள். அதற்கவர் அவர்கள் தங்களின் தீமைகளை எண்ணிப்பார்ப்பதற்காகவும் அவர்களின் நன்மைகள் வீணாகாமல் இருப்பதற்காகவும் உத்தரவாதம் அளித்து அவர்களுக்கு நீர் ஏவியிருக்கக் கூடாதா? என்றார்கள்.

பின்னர் அவரும் செல்ல நாமும் அவருடன் சென்றோம், அந்தக் குழுக்களின் ஒரு குழுவினருகில் வந்து நின்று, நான் உங்களிடம் காணக்கூடிய உங்களின் இச்செயற்பாடு யாதென்று? அவர்கள் வினவினார்கள். அப்போது அவர்கள் அபூ அப்திர்ரஹ்மானே! நாம் தக்பீர்களையும், தஹ்லீல்களையும், மற்றும் தஸ்பீஹூகளையும் கணக்கிட்டுக் கொள்ளும் பொடிக்கற்கள் தான் இவைகள், என்றார்கள். அப்போது இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நீங்கள் உங்கள் தீமைகளை எண்ணிப்பாருங்கள், நான் உங்களின் நன்மைகள் வீணாகமல் இருக்க பொறுப்பேற்றுக் கொள்கின்றேன் என்றார்கள். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தவர்களே உங்களுக்கு நாசம் உண்டாகட்டும், உங்களின் அழிவு எவ்வளவு விரைவானது, இதோ உங்களின் நபியின் தோழர்கள் நிறைந்து இருக்கின்றார்கள், இதோ நபியவர்களின் ஆடை இன்னும் உக்கிவிடவில்லை, இன்னும் அவரின் பாத்திரம் உடைந்து விடவுமில்லை. என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நிச்சயமாக நீங்கள் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மார்க்கத்தை விட நேரான மார்க்கத்தில் இருக்கின்றீர்களா! அல்லது வழி கேட்டின் வாசலைத் திறந்தவர்களாக நீங்கள் இருக்கின்றீர்களா! அதற்கவர்கள் அபூ அப்திர்ரஹ்மானே அல்லாஹ்வின் மீதாணையாக நாம் நன்மையைத் தவிர வேரெதனையும் நாடவில்லை என்றார்கள். அப்போது அவர்கள் எத்தனையோ நன்மையை நாடுபவர்கள் அதனைச் சரியாகச் செய்யமாட்டார்கள். நிச்சயமாக ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குக் கூறினார்கள்: நிச்சயமாக ஒரு கூட்டம் வரும் அவர்கள் அல்குர்ஆனை ஓதுவார்கள், ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிகளை அடையாது, அல்லாஹ்வின் மீது ஆணையாக அதில் அதிகமானவர்கள் உங்களில் இருப்பீர்களோ! என நான் அறிய மாட்டேன் என்று கூறிய பின் அவர்களை விட்டும் சென்று விட்டார்கள்.

குழுக்களாக இருந்த அனைவரும் நஹ்ரவான் யுத்தத்தின் போது கவாரிஜ்களுடன் இருந்து எங்களைத் தாக்குவதைக் கண்டோம் என்று அம்ர் பின் ஸலமா என்பவர் கூறினார்கள். தாரமீ – 206

இமாம் மாலிக் பின் அனஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் ஒரு மனிதர் வந்து, நான் எங்கிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்றார்? அதற்கு மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்ட இடத்திலிருந்து இஹ்ராம் கட்டிக் கொள் என்றார்கள். அப்போது அம்மனிதர் அதை விட தூரமான ஒரு இடத்திலிருந்து நான் இஹ்ராம் கட்டினால் என்ன? என்று கேட்டார். அதற்கு மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நான் அதனை அபிப்பிராயப்படவில்லை என்றார்கள். இதில் எதனை நீங்கள் வெறுக்கின்றீர்கள்? என்று அந்த மனிதர் கேட்டார். உன் மீது பித்னாவை வெறுக்கின்றேன் என்றார்கள். நன்மையை அதிகரிப்பதால் என்ன பித்னா? என்று அவர் கேட்டார். மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் கூறுகின்றான்: அவரின் கட்டளைக்கு மாறு செய்வோர் தமக்கு ஒரு துன்பம் நேருவதையோ அல்லது தமக்கு நோவினை தரும் வேதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளட்டும். (24:63) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டாத ஒன்றைக் கொண்டு சிறப்பித்த உன்னுடைய பித்னாவை விட வேறு எந்த பித்னா மகத்தானதாக இருக்க முடியும்? என்று இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கேட்டார்கள். இதனை அபூ ஷாமா என்பவர் அல்பாஇஸ் அலா இன்காரில் பிதஇ வல் ஹவாதிஸி என்ற நூலில் இடம்பெறச் செய்துள்ளார்.

 

பித்அத்வாதிகளுக்கு மறுப்பளிப்பதில் அஹ்லுஸ்ஸூன்னா வல்ஜமாஅத்தினரின் போக்கு

 

இது விடயத்தில் இவர்களின் போக்கு அல்குர்ஆன் அஸ்ஸூன்னாவின் மீது அமையப் பெற்றதாகும். இதுவே போதுமானதும், மறுக்க முடியாததுமான போக்காகும். இவர்கள் பித்அத் வாதிகளின் வாதங்களைக் குறிப்பிட்டு அதற்குரிய மறுப்பையும் வெளியிடுவார்கள். இன்னும் ஸூன்னாவைப் பற்றிக் கொள்வது கட்டாயமானது என்பதற்கும், பித்அத்கள், நூதனங்களை விட்டும் தடுத்துக் கொள்வதற்கும் அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸூன்னாவைக் கொண்டு ஆதாரங்கள் முன்வைப்பார்கள். இன்னும் இதிலே அநேகமான தொகுப்புக்களைத் தொகுத்துள்ளார்கள், அகீதா, ஈமானின் அடிப்படைகளிலே ஷீஆக்கள், கவாரிஜ்கள், ஜஹ்மியாக்கள், முஃதஸிலாக்கள், அஷ்அர்ய்யாக்கள் போன்றோரின் பித்அத்தான கருத்துக்களுக்கு அகீதா புத்தகங்களில் மறுப்பளித்துள்ளனர். இது விடயத்தில் குறிப்பாக புத்தகங்களைத் தொகுத்துள்ளார்கள். இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் மற்றும் ஏனைய இமாம்களும் இது விடயத்தில் தொகுத்துள்ளதைப் போன்று, உஸ்மான் பின் ஸஈத் அத்தாரமீ, மற்றும் ஷைஹூல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்களின் புத்தகங்களில் போன்றும், அவர்களது மாணவரான இப்னுல் கைய்யும் இன்னும் முஹம்மத் பின் அப்தில் வஹ்ஹாப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் மற்றும் ஏனையோர்கள் இவ்வாறான குழுக்களுக்கு மறுப்பளித்துள்ளார்கள், கப்ர் வணங்கிகள், சூபியாக்கள் போன்றோருக்கும் மறுப்பளித்துள்ளனர். பித்அத்வாதிகளுக்குரிய மறுப்பாக ஏறாலமான புத்தகங்கள் உள்ளன.

 

பழைய நூற்களிலிருந்து :

அல்இஃதிஸாம் – இமாம் அஷ்ஷாதிபி ரஹிமஹுல்லாஹ்

இக்திழாஉஸ் ஸிராதில் முஸ்தகீம் – ஷைஹூல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ்

இன்காருல் ஹவாதிஸி வல் பிதஇ – இப்னு வள்ளாஹ் ரஹிமஹுல்லாஹ்

அல்பாஇஸ் அலா இன்காரில் பிதஇ வல்ஹவாதிஸி – அபூ ஷாமா ரஹிமஹுல்லாஹ்

அல்ஹவாதிஸூ வல்பிதஉ – தர்தூஷீ ரஹிமஹுல்லாஹ்

மின்ஹாஜூஸ் ஸூன்னா அந்நபவிய்யா பிர்ரத்தி அலார் ராபிழதி வல்கதரிய்யதி – ஷைஹூல் இஸ்லாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ்

 

நவீன நூற்களிலிருந்து:

அல்இப்தாஉ பீ முளார்ரில் இப்திதாஃ  – அலீ மஹ்பூழ்

அஸ்ஸூனனு வல் முப்ததஆதுல் முதஅல்லிகது பில் அத்காரி வஸ்ஸலவாதி – ஷைய்க் முஹம்மத் பின் அஹ்மத் அஷ்ஷகீரீ அல்ஹவாமிதீ

ரிஸாலதுத் தஹ்தீரி மினல் பிதஇ – ஷைய்க் அப்துல்லாஹ் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ்

முஸ்லிம்களின் உலமாக்கள் – அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் – பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஒலி நாடாக்களிலும் ஜூம்ஆ குத்பாக்களிலும் மன்றங்களிலும் வகுப்புக்களிலும் பித்அத்களை மறுப்பவர்களாகவும் இன்னும் பித்அத்வாதிகளுக்கு மறுப்பளிக்கக் கூடியவர்களாகவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றாகள்.

 

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

By: ABU MUAAD JAMALUD DEEN IBN FAROOK

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *