உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பித்அத்வாதியா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: நீங்கள் ஜும்ஆவின் ஆரம்ப அதானை பித்அத் என்று கூறுவீர்களாயின் அதை உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் செய்தபோது அவரும் பித்அத்வாதியாகிவிடுவாரா?

பதில்: “அல்லாஹ் என்னைக் காத்தருள்வானாக! உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நேர்மையான ஒரு கலீபா ஆவார். (அவரைப் பற்றி) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: ‘மலாஇகாமார்கள் வெட்கப்படக்கூடிய ஒருவர் குறித்து நான் வெட்கப்படாமல் இருப்பதற்கு எனக்கு என்ன நேர்ந்தது?’ எனக் கேட்டார்கள்.

மேலும், ரூமா என்ற கிணற்றை யார் வாங்குகின்றாரோ அவருக்கு சுவர்க்கம் உண்டு என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது உடனே அதனை உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் வாங்கி அதை முஸ்லிம்களுக்காக வழங்கினார்கள்.

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (இவர் விடயமாக அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பார்த்து பின்வருமாறு) கூறினார்கள்: ‘அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவருக்கு ஏற்படக்கூடிய சோதனைகளைக் கொண்டு அவருக்கு சுவர்க்கம் இருக்கின்றது என்றும் நன்மாராயம் கூறுங்கள்.’

இச்செய்திகள் யாவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் உறுதியாகியுள்ளன. அவைகளில் சில ஹதீஸ்கள் புஹாரீ, முஸ்லிமில் பதிவாகியுள்ளன. இன்னும், சில ஹதீஸ்கள் அவ்விரண்டுமல்லாத ஏனைய கிரந்தங்களில் ஸஹீஹாகப் பதிவாகியுள்ளன. இவை அல்லாத அதிகமான சிறப்புக்கள் உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இருக்கின்றன. அவர் சுவர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் வழங்கப்பட்டவர் என்பதே அவருக்குப் போதுமானதாகும். அபூமூஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் முன்பு குறிப்பிடப்பட்டது போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அவர் குறித்து) ‘அவருக்கு அனுமதி கொடுங்கள். மேலும், அவருக்கு ஏற்படக்கூடிய சோதனைகளைக் கொண்டு அவருக்கு சுவர்க்கம் இருக்கின்றது என்றும் நன்மாராயம் கூறுங்கள்’ என்று கூறினார்கள். மேலும், இவர் விடயமாக ஸஈத் இப்னு ஸைத் இன்னும், இவர்களல்லாத ஏனையோரின் ஹதீஸ்களும் முன்பு குறிப்பிடப்பட்டுள்ளன.

என்றாலும், உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இஜ்திஹாத் என்ற அடிப்படையில் ஆய்வு செய்தார்கள். தொழுகையின் நேரம் நெருங்கிவிட்டதை மனிதர்களுக்கு உணர்த்துவதற்காக சந்தையில் ஒரு முஅத்தினை ஏற்படுத்தினார்கள். இன்று சில முஸ்லிம்கள் செய்வது போல் அந்த அதான் பள்ளிவாசலில் காணப்படவில்லை. அத்தோடு தற்போதைய மனிதர்களின் நிலை அன்றைய நிலையைவிட வேறுபட்டிருக்கின்றது. எனவே, நாம் அந்த அதானை அடிப்படையில் வைத்துப் பார்க்கும்போது அனுமதிக்கப்பட்டதல்ல என்றே கருதுகின்றோம். முஃமின்களின் தலைவராகிய உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த இஜ்திஹாத் ஆராய்ச்சியில் தவறிழைத்துள்ளார்கள். அவருடைய இந்த ஆராய்ச்சிக்கும் அவருடைய சிறந்த நிய்யத்துக்கும் கூலி வழங்கப்படும்.

அவர் ஒரு ஷஹீதாவர், சுவர்க்கத்துக்கு நன்மாராயம் கூறப்பட்டவர்களில் ஒருவராவார். அவருடைய இத்தவறு மன்னிக்கப்பட்டதாகும். ஆனால், இத்தவறை அவருக்குப் பின் ஆதாரம் தெளிவாகிய பின்பும் தொடர்ந்து செய்பவர் இது விடயத்தில் பித்அத்வாதியாக இருப்பார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களுடைய இரு தோழர்களாகிய அபூபக்கர், உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களுக்கும் மாறுசெய்கின்ற விதத்தில் இச்செயலைச் செய்பவர்களுக்கு மன்னிப்பு இல்லை.

இதுவே ஜும்ஆவின் முதல் அதான் குறித்த சுருக்கமான விளக்கமாகும். இவ்விளக்கம் சோர்வடையச் செய்யும் நீண்டதாகவோ குறைகள் உள்ள சுருக்கமானதாகவோ அமையக்கூடாது என்பதில் நாம் முயற்சி செய்தோம். இது விடயத்தில் எமது நோக்கம் பின்வரும் அல்லாஹுத்தஆலாவின் கூற்றுக்குக் கட்டுப்படுவதேயாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: ‘(நபியே!) நீங்கள் ஞாபகமூட்டுங்கள், ஏனெனில் நிச்சயமாக ஞாபகமூட்டல் விசுவாசிகளுக்குப் பயனளிக்கும்.” (அத்தாரியாத்: 55)

அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

வழங்கியவர்: அஷ்ஷெய்ஹ் யஹ்யா இப்னு அலீ அல்ஹஜூரி ஹபிழஹுல்லாஹ்.

பார்க்க: அஹ்காமுல் ஜுமுஆ வபிதஉஹா, பக்கம்: 450,451.

தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்