ஸூரதுன் நூர் விளக்கவுரை – 16

بسم الله الرحمن الرحيم

எப்போது அன்னியப் பெண்களைப் பார்க்க முடியும்?

மேற்கூறப்பட்ட தகவல்களில் இருந்து அன்னியப் பெண்களைப் பார்ப்பது ஹராம் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆயினும், சில நலவுகளை நாடி இஸ்லாம் அவர்களைப் பார்ப்பதை அனுமதித்துள்ளது. இதற்குச் சான்றாக அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸைக் குறிப்பிடலாம். இந்த ஹதீஸில் நபியவர்கள் ஸகாபாக்களான அலி, சுபைர், அபூமுர்ஷித் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோரை இணைவைக்கும் ஒரு பெண்மணியைப் பின் தொடர்ந்து சென்று, ஹாதிப் இப்னு அபீபல்தஆ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்கத்துக் காபீர்களுக்கு ஒப்படைக்குமாறு அனுப்பி வைத்த கடிதத்தை பறிமுதல் செய்து கொண்டு வருமாறு பணித்தார்கள். அப்பெண்மணியைச் சந்தித்த அம்மூவரும் கடிதத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு வேண்டிய போது, ஆரம்பத்தில் தன்னிடம் கடிதம் இருக்கும் செய்தியை மறைத்தாள், பிறகு “கடிதத்தை ஒப்படைக்காவிட்டால் உனது ஆடைகளைக் களைந்து பரிசோதிப்போம்” என்று அம்மூவரும் கூறிய போது நாணத்தினால் அதனை ஒப்படைக்க இணங்கினாள். (புகாரி: 3081, முஸ்லிம்: 2494)

இந்த ஹதீஸ் குறித்து இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது: “இந்த ஹதீஸிலிருந்து அத்தியவசியமான சந்தர்ப்பங்களில் அன்னியப் பெண்களின் மறைவிடங்களைப் பார்க்கலாம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்” என்கிறார்கள். (பத்ஹூல் பாரி: 11 ∕ 47)

மேலும், இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது: “அல்லாஹுத்தஆலா பொதுப்படையாகப் பார்வையைத் தாழ்த்துமாறு கட்டளையிடவில்லை மாற்றமாக, சில சமயங்களில் மாத்திரமே பார்வையைத் தாழ்த்துமாறு கட்டளையிட்டுள்ளான். ஆயினும், மர்மஸ்தானத்தைப் பொறுத்தளவில் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பேணிக் கொள்ளுமாறு கட்டளையிட்டிருப்பதுடன், தனக்கு உரிமையானவற்றிலே அதனைப் பிரயோகிக்குமாறும் பணித்துள்ளான். எனவேதான், பொதுப்படையாக மர்மஸ்தானத்தைப் பேணிப்பாதுகாத்துக் கொள்ளுமாறு பிரஸ்தாபித்துள்ளான்” என்கிறார்கள். (ரவ்லதுல் முஹிப்பீன்: 92)

இந்த அடிப்படையில் பின்வரக்கூடிய சந்தர்ப்பங்களில் அன்னியப் பெண்களைப் பார்க்கலாம் என அறிஞர்கள் வகைப்படுத்தியுள்ளார்கள்.

1.     திருமணப் பெண்ணைத் தெரிவு செய்யும் போது…

திருமணம் செய்ய நாடுபவர் தன் துணைவியைத் தெரிவு செய்ய நாடும் போது அன்னிய பெண்ணைப் பார்ப்பது கூடும் என்ற விடயத்தில் அனைத்து அறிஞர்களும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளார்கள். இவ்வாறு பார்ப்பதின் மூலம்…

    தனக்குத் திருப்தியான ஒரு துணைவியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

    எதிர்காலத்தில் இல்லற வாழ்க்கையில் அதிருத்தியடைந்து கைசேதப்படுவதைத் தடுக்க முடியும்.

 குறித்த பெண்மணி தனக்குத் திருத்தியளிக்காமல் இருக்கும் போது தனது விருப்பமின்மையைத் தெரியப்படுத்த இலகுவாக இருக்கும்.

    உற்சாகமாகவும், ஆர்வத்துடனும் இல்வாழ்க்கையில் காலடி வைக்க சந்தர்ப்பம் வழங்குகின்றது.

ஓர் உண்மையான அறிவுள்ள ஆண்மகன் எதிர்காலத்தில் தன்னை அடைய இருக்கின்ற நலவுகளையும்,  கெடுதிகளையும் தெளிவாகத் தெரிந்து கொள்ளும் வரை ஒன்றை நோக்கி காலடி வைக்க மாட்டான். (ஹுஜ்ஜதுல்லாஹில் பாலிகா: 2 ∕ 124)

2.     வைத்தியம் செய்வதற்காக…

பொதுவாக ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணே வைத்தியம் செய்ய வேண்டும். ஆயினும், அவசியம் ஏற்படும் போது ஆண் வைத்தியரிடம் ஓர் அன்னியப் பெண்மணி சென்று சிகிச்சை பெறுவதை அனைத்து அறிஞர்களும் அனுமதித்துள்ளனர். இருந்தாலும், இதற்கென்று சில தனிப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அவற்றைக் கருத்தில் கொள்வது அவசியமாகும்.

நபியவர்கள் காலத்தில் பெண்கள் யுத்தங்களில் பங்குபற்றக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் யுத்தத்தில் ஈடுபடக் கூடியவர்களுக்கு நீர் புகட்டக் கூடியவர்களாகவும், காயமுற்றவர்களையும், கொலை செய்யப்பட்டவர்களையும் மதீனாவுக்கு கொண்டு செல்லக் கூடியவர்களாகவும் இருந்தார்கள். (புகாரி: 2883)

ஆயினும், இவ்வனுமதியைப் பயன்படுத்தி எல்லை மீறிச் செல்வதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். எனவே, இது குறித்து அறிஞர்கள் கூறிய சில நிபந்தனைகளை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

 பிணியுற்ற ஒரு பெண்மணிக்கு வைத்தியம் செய்வதற்கு பெண் வைத்தியரே ஏற்றமானவர் என்பது அடிப்படையாகும். ஆயினும், தகுதியான பெண் வைத்தியரைப் பெற்றுக் கொள்ள முடியாதவிடத்து ஆண் வைத்தியரை நாடிச் செல்வதில் தவறேதும் கிடையாது.

குறிப்பு: இதனைப் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் மார்க்கத் தீர்ப்புக்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

 குறித்த அப்பெண்மணிக்கு வைத்தியம் செய்யக் கூடியவர் கெட்ட நடத்தை உள்ளவர் என்று குற்றம் சாட்டப்பட்டவராக இருக்கக் கூடாது.

   அப்பெண்மணியுடன் அவளின் மஹ்ரம் அல்லது நம்பிக்கையான மற்றொரு பெண்மணி இருக்க வேண்டும்.

 குறித்த அவ்வைத்தியர் தனக்குத் தேவையான இடங்களை மாத்திரம் பரிசோதிக்க வேண்டும். மற்ற இடங்களை மறைத்துவிட வேண்டும்.

 அவசியம் வைத்தியரை நாடவேண்டிய தேவையில் உள்ள பெண்மணியாக இருக்க வேண்டும். (அஹ்காமுல் அவ்ரதி வன் நள்ர்: 344)

3.     நீதிபதி முன்னிலையில் சாட்சி கூறும் போது…

ஒரு பெண்மணி சாட்சி கூறுவதற்காக நீதிமன்றத்திற்கு சமூகம் தந்தால், அவரை இனங்காண்பதற்காக மற்றும் அடையாளப்படுத்திக் கொள்வதற்காக பார்க்க முடியும். ஆயினும், இதனை இஸ்லாமிய வரையறைக்குற்பட்ட பார்வையாக அமைத்துக் கொள்ள வேண்டும். (அஹ்காமுல் அவ்ரதி வன் நள்ர்: 350)

4.     வியாபாரம் போன்ற கொடுக்கல் வாங்கலின் போது…

இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ஓர் ஆணுக்கு சாட்சியின் போதும், வியாபாரத்தின் போதும் அன்னியப் பெண்ணின் முகத்தைப் பார்க்க முடியும். மேலும், அப்பெண்ணுக்கும் அவ்வாணின் முகத்தைப் பார்க்க முடியும்.” (அல்மஜ்மூஉ: 16 ∕ 139)

–     இன்ஷா அல்லாஹ் தொடரும்.

–     அபூஹுனைப்