சுத்ரா பற்றித் தெரிந்து கொள்வோம் – 04

بسم الله الرحمن الرحيم

சுத்ராவுக்கு நெருக்கமான நிற்றல்

தொழக்கூடியவர் சுத்ராவை நெருங்கியிருப்பதை உலமாக்கள் சுன்னாவாகக் குறிப்பிட்டுள்ளார்கள். இமாம் இப்னு ஹுஸைமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய “ஸஹீஹ்” எனும் நூலில் இது தொடர்பாகத் தலைப்பிடுகையில்: “சுத்ராவை அண்டியிருப்பது தொடர்பான ஏவல் பற்றிய பாடம்” என்று எழுதியிருக்கின்றார்கள். அவ்வாறு தலைப்பிட்ட பிறகு, ஸஹ்ல் இப்னு அபீஹைஸமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் குறிப்பிட்டுள்ளார்கள். அந்த ஹதீஸில் நபியவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: “உங்களில் ஒருவர் சுத்ராவை நோக்கித் தொழுதால் அதனை நெருங்கி இருக்கட்டும். ஷைத்தான் அவருடைய தொழுகையைத் துண்டித்துவிடாது இருக்கட்டும்!” (முக்னி: 3/83)

தொழுகையாளியைக் கடந்து செல்வதால் அவருடைய தொழுகையைத் துண்டித்துவிடக்கூடிய விடயங்கள் யாவை?

இவ்விடயம் குறித்துக் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் மிக ஏற்றமான கருத்தாகப் பின்வரும் கருத்தைக் குறிப்பிடலாம்.

தொழுகையை மூன்று விடயங்கள் துண்டிக்கின்றன.

1.    தொழுகையாளியை ஒரு பெண் கடந்து செல்லும் போது

2.    தொழுகையாளியை கழுதை கடந்து செல்லும் போது

3.    தொழுகையாளியை கருப்பு நிற நாய் கடந்து செல்லும் போது

இக்கருத்தை ஸகாபாக்களில் அனஸ் இப்னு மாலிக், இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர் கூறியுள்ளனர். மேலும், இக்கருத்தை அதா, அல்ஹஸன், இப்னு ஜுரைஜ், இப்னு ஹுஸைமா, அஹ்மத் ரஹிமஹுமுல்லாஹ் போன்ற அறிஞர்களும் கூறியுள்ளார்கள். இதற்குச் சான்றாகப் பின்வரும் அபூதர், அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹுமா போன்றோரின் ஹதீஸ்களை முன்வைக்கின்றனர்.

“முஸ்லிமான மனிதனின் தொழுகையை, அவருக்கு முன்னிலையில் பிரயாணத்தின் இருக்கையின் பிற்பகுதியளவு உயரமுடைய சுத்ரா ஆவது பேணப்படாத போது, அவருடைய தொழுகையைப் பெண், கழுதை, கருப்பு நிற நாய் ஆகியன முறித்துவிடும்” என நபியவர்கள் கூறியதாக அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்)

இதே மாதிரியான வாசகங்களைக் கொண்டு அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அறிவித்துள்ளார்கள். ஆயினும், அச்செய்தியில் கருப்பு நிறத்தையுடைய நாய் என்று இடம்பெறவில்லை.

மேலும், இக்கருத்தை இமாம்களான இப்னு தைமியா, இப்னுல் கையிம், இப்னு ஹஸ்ம் ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோரும் சரிகண்டுள்ளார்கள்.

மாற்றமாக, இச்செய்தியின் கருத்து தொழுகை துண்டிக்கப்படமாட்டாது, கூலியில் குறைவே ஏற்படும் என்று வலிந்துரைப்பது வெளிப்படையான விளக்கத்திற்கு மாற்றம் செய்வதாகும். அதே நேரத்தில், ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் நபியவர்கள் தொழுது கொண்டிருக்கையில் அவர்களுக்கு முன்னிலையில் தூங்கியதாகக் குறிப்பிடப்பட்ட செய்தி சரியான நாட்டத்தைத் தெளிவுபடுத்தக் கூடியதாக இல்லை. ஏனெனில், நாம் இங்கு பேசிக் கொண்டிருப்பது தொழுகையாளியைக் கடந்து செல்வதைப் பற்றியாகும். தொழுபவருக்கு முன்னிலையில் நின்று கொண்டிருப்பதைப் பற்;றியல்ல.

மேலும், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸான, அவர்கள் சில ஸப்புகளுக்கு முன்னால் நடந்து செல்வார்கள் என்று குறிப்பிடப்பட்டது தொழுகைக்கு எவ்விதத்தீங்கையும் ஏற்படுத்தாது. ஏனொனில், இமாமின் சுத்ராவே அவருக்குப் பின்னுள்ளவர்களினதும் சுத்ராவாகும். (அல்அவ்ஸத்: 5/100, அல்முக்னி: 3/97), பத்ஹுல் பாரி – இப்னு ரஜப் – : 514)

இமாமுடைய சுத்ராவே அவருக்குப் பின்னுள்ளவர்களினதும் சுத்ராவாகும்.

இமாம் இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது அல்முக்னி (3/81) எனக்கூடிய நூலில் கூறும் போது: “நிச்சயமாக இமாமுடைய சுத்ரா அவருக்குப் பின்னுள்ளவர்களினதும் சுத்ராவாகும். இதனை இமாம் அஹ்மத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், இதுவே அதிகமான அறிஞர்களின் கருத்தாகும்” என்கிறார்கள்.

இதற்கு அபூஸ்ஸினாத் என்பவர் காரணம் கூறுகையில்: “ஏனெனில், நபியவர்கள் சுத்ராவை நோக்கித் தொழுதார்கள். அப்போது தன்னுடைய தோழர்களை நோக்கி, தங்களுக்கும் சுத்ராக்களை ஏற்படுத்திக் கொள்ளுமாறு பணிக்கவில்லை” என்று கூறிவிட்டு, இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் ஸப்புகளைக் கடந்து சென்ற சம்பவத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். அச்சம்பவத்தில் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டதை எவரும் கண்டிக்கவில்லை என்றும் இடம்பெற்றுள்ளது. இதனையும் குறித்த அறிஞர் அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்கள்.

மேலும், இமாமுடைய சுத்ரா அவருக்குப் பின்னுள்ளவர்களுக்கும் சுத்ராவாகும் என்ற வாசகத்தின் காருத்தாவது: எதுவரை இமாமுக்கும் அவருடைய சுத்ராவுக்கும் இடையில் தொழுகையைத் துண்டிக்கக்கூடிய ஒன்று கடந்து செல்லவில்லையோ, அதுவரை மஃமூம்களுடைய தொழுகை செல்லுபடியானதாக இருக்கும் என்பதுவாகும். அதேநேரத்தில், மஃமூம்களின் சில ஸப்புகளுக்கு மத்தியினால் எந்த ஒன்றும் கடந்து செல்வதால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படப்போவதில்லை.

–     இன்ஷா அல்லாஹ் தொடரும்.

–     தொகுப்பு: அபூஹுனைப்