தராவீஹ் தொழுகையை பள்ளிவாசலில் கூட்டாகத் தொழுவது பித்அத்தாகுமா?

بسم الله الرحمن الرحيم

கேள்வி: சில தினங்களுக்கு முன்பு ஒரு நபர் பள்ளிவாசலில் எழுந்து “கூட்டான அமைப்பில் தராவீஹ் தொழுவது (ஆதாரங்களில்) உறுதி செய்யப்படாத அம்சமாகும், ஒரு மனிதன் தனது வீட்டில் (நபிலான தொழுகைகளைத்) தொழுவதே மிகச் சிறந்ததாகும்” என்று கூறினார். இக்கூற்றின் தீர்ப்பு என்ன?

பதில்: தராவீஹ் தொழுகையை பள்ளிவாசலில் (ஜமாஅத்தாகத்) தொழுவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினதும் நேர்வழி பெற்ற கலீபாக்களினதும் சங்கைமிகு ஸஹாபாக்களினதும் வழிமுறையாகும். எமது முன்சென்ற மற்றும் பின்வந்த முஸ்லிம்களின் செயலும் இதுவாகவே அமைந்திருக்கிறது. இத்தொழுகையை வீட்டில் நிறைவேற்றுவதைவிட பள்ளிவாசலில் நிறைவேற்றுவதே மிகச் சிறந்ததாகும். மனிதர்கள் ஒன்று சேர்ந்து கூட்டாகத் தொழுவதற்கு மார்க்கத்தில் அனுமதி வழங்கப்பட்ட தராவீஹ் தொழுகை, கிரகணத் தொழுகை போன்றவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றியவர்களாகவும் சுன்னாவை வெளிப்படுத்தியவர்களாகவும் பள்ளிவாசலில் நிறைவேற்றுவதே மிகச் சிறந்ததாகும்.

இதை மறுப்பவர் அவர் மறுக்கும் இவ்விடயத்தில்  தவறிழைத்துவிட்டார். அவருக்கு உபதேசம் செய்வதும் அவரது தவறை தெளிவுபடுத்துவதும் (எமது) கடமையாகும். மேலும், பேசுவதற்கு முன்பு கற்றுக் கொள்வது அவருக்கு கடமையாகும்.

–    வழங்கியவர்: அஷ்ஷெய்ஹ் ஸாலிஹ் அல்பவ்சான் ஹபிழஹுல்லாஹ்

– பத்வா வெளியிடப்பட்ட திகதி: 2006-12-01

–   தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்