பெருநாள் தினம் வெள்ளிக்கிழமையில் வந்தால்…. !

بسم الله الرحمن الرحيم

கேள்வி: பெருநாள் தினமானது வெள்ளிக்கிழமையில் வந்தால் ஜும்ஆத் தொழுகையின் சட்டம் யாது? அதனை நிலைநாட்டுவது அனைத்து முஸ்லிம்கள் மீதும் வாஜிபாக அமையுமா? அல்லது, ஒரு சாராருக்கு மாத்திரம் உரியதாக இருக்குமா? ஏனெனில், அவ்வாறு பெருநாள் தினம் வெள்ளிக்கிழமையில் வந்தால் ஜும்ஆ கிடையாது என்று சில மனிதர்கள் நினைக்கிறார்கள். (எனவே, இதன் நிலைப்பாடு குறித்து யாது கூறுவீர்கள்?)

பதில்: ஜும்ஆ நிறைவேற்றுவதற்குப் பொருப்பு வழங்கப்பட்ட இமாம் மற்றும் அதனை நிறைவேற்றும் கதீப் ஆகியோர் மீது ஜும்ஆவை நிலைநாட்டுவது வாஜிப் ஆகும். மேலும், அவர்கள் பள்ளிவாசலுக்கு வருகை தந்து, அங்கு சமுகம் தந்தோருக்கு தொழுகை நடாத்தவும் வேண்டும். இவ்வாறு நபியவர்கள் மேற்கொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள். நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் ஸஹீஹில் பதிவான செய்தியின் அடிப்படையில், சில சமயம் பெருநாள், ஜும்ஆ ஆகிய தொழுகைகளில் அத்தியாயங்களான அல்அஃலா, அல்காசியா ஆகியவற்றை ஓதுவார்கள். என்றாலும், பெருநாள் தொழுகைக்கு சமுகம் தந்தவர்களுக்கு ஜும்ஆவுக்கு சமுகம் தராது வீட்டில் தனியாகவோ அல்லது, பெருநாள் தொழுகையில் ஈடுபட்ட தன்னடைய சில சகோதரர்களுடன் கூட்டாகவோ ளுஹரைத் தொழுது கொள்ள முடியும். ஆயினும், மக்களுடன் ஜும்ஆத் தொழுவதே மிக ஏற்றமானதும் நிரப்பமானதுமாகும். மாறாக, பெருநாள் தொழுகையில் ஈடுபட்ட காரணத்திற்காக ஒருவர் ஜும்ஆ நிறைவேற்றுவதை விட்டுவிட்டால் அவர் மீது எவ்விதக் குற்றமும் இல்லை. எனினும், அவர் ளுஹர் தொழுகையைத் தனியாகவோ அல்லது கூட்டாகவோ நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக!

–    வழங்கியவர்: அஷ்ஷெய்க் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ்

–    தமிழில்: அபூஹுனைப்