சுத்ரா பற்றித் தெரிந்து கொள்வோம் – 05

بسم الله الرحمن الرحيم

சுத்ராவுக்குப் பின்னால் ஒருவர் கடந்து சென்றால் அல்லது, சுத்ராவுக்குத் தொலைவில் உள்ள ஓர் இடத்தால் ஒருவர் சென்றால் அதனுடைய சட்டம் யாது?

இமாம் இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய அல்முங்னி (3/102) எனும் நூலில் கூறும்போது: “யார் சுத்ராவை நோக்கித் தொழுகிறாரோ அவருடைய சுத்ராவுக்குப் பின்னால் தொழுகையைத் துண்டிக்கக்கூடிய ஒன்று கடந்து சென்றால் அவருடைய தொழுகை துண்டிக்கப்படமாட்டாது. மேலும், அவருடைய சுத்ராவுக்குப் பின்னால் தொழுகையைத் துண்டிக்காத ஒன்று கடந்து சென்றால் அது வெறுக்கத்தக்கதாகக் கருதப்படமாட்டாது.

அவ்வாறு அவருக்கும் அவருடைய சுத்ராவுக்கும் மத்தியில் தொழுகையைத் துண்டிக்கக்கூடிய ஒன்று கடந்து சென்றால் அத்தொழுகை துண்டிக்கப்படும். மாறாக, தொழுகையைத் துண்டிக்காத ஒன்று கடந்து சென்றால் அச்செயல் வெறுக்கப்படும். அத்துடன் தொழுகையாளிக்கு முன்னால் சுத்ரா காணப்படாமலிருந்து, அவருக்கு முன்னால் தொழுகையைத் துண்டிக்கக்கூடிய ஒன்று சமீபமாகக் கடந்து சென்றால் அது அவருடைய தொழுகையைத் துண்டித்துவிடும். மாறாக, தொழுகையைத் துண்டிக்காத ஒன்று அவ்வாறு கடந்து சென்றால் அது வெறுக்கத்தக்கதாகக் கருதப்படும். மேலும், அவ்வாறு கடந்து செல்லுதலானது தொலைவிலுள்ள இடமாகக் காணப்பட்டால் எவ்வித சட்டமும் அதனுடன் தொடர்புபடாது. இன்னும், அறிஞர்களிலிருந்து ஒருவரையும் அவ்வாறான தூர இடத்திற்கும் மற்றும், சமீபமான இடத்திற்கும் எல்லையிட்டதாக நான் அறியமாட்டேன்…” என்கிறார்கள்.

தொழுகையாளியைக் கடந்து செல்பவன் ஷைத்தான் ஆவான்!

இவ்வாசகம் தொடர்பான ஒரு செய்தி அபூஸஈத் அல்ஹுத்ரிய்யி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக இப்னு ரஜப் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய பத்ஹுல் பாரி எனக்கூடிய நூலில் கூறும்போது: “இவ்வசனத்தின் கருத்து விடயத்தில் அறிஞர்கள் முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டுள்ளனர். சிலர் இதனுடைய கருத்தாவது, நிச்சயமாக அவனுடன் ஷைத்தான் இணைந்திருக்கின்றான். அவனே இவ்வாறு செய்யுமாறு அவனைத் தூண்டுகின்றான் என்று விளக்கமளிக்கின்றனர். இக்கருத்து அபூஹாதிம் போன்ற அறிஞர்களின் தெரிவாகும். இதற்குச் சான்றாக இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸைக் குறிப்பிடலாம். அச்செய்தியில் ‘நிச்சயமாக அவனுடன் ஒரு கூட்டாளி இருக்கின்றான்’ என்று இடம்பெற்றுள்ளது. மேலும் சிலர் கூறுகையில்: இவ்வாசகத்துடைய கருத்தாவது, நிச்சயமாக அவனுடைய இச்செயல் ஷைத்தானுடைய செயலாகும். இதன் மூலம் அவன் மனித ஷைத்தான்களில் நின்றும் உள்ளவனாக ஆகிவிடுகின்றான் என்கின்றனர். இக்கருத்தை அல்ஜவ்ஸஜானி போன்ற அறிஞர்கள் தெரிவு செய்துள்ளார்கள்” என்கிறார்கள்.

மேற்கூறப்பட்ட இரு கருத்துக்களையும் நோக்குகையில் முதல் கருத்தே சரியான கருத்தாகத் தோன்றுகின்றது. இதற்கு நாம் குறிப்பிட்ட இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸ் சான்று பகருகின்றது. இதனால்தான் இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் புலூகுல் மறாம் எனக்கூடிய நூலில் அபூஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைத் தொடர்ந்து இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் ஹதீஸைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

தொழுகையாளியைக் கால்நடைகளில் ஒன்று கடந்து செல்ல நாடினால்…

இவ்விடயம் குறித்து ஒரு ஹதீஸ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் ஹாகிம் எனக்கூடிய கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. ஒரு முறை நபியவர்கள் தொழுதுகொண்டிருக்கையில் அவர்களுக்கு முன்னால் ஓர் ஆடு கடந்து செல்ல எத்தனித்தது. அப்போது நபியவர்கள் அதனைக் கடந்து செல்லவிடாது தடுக்கும் முகமாக தனக்கு முன்னால் சுத்ராவாகக் காணப்பட்ட மதிலை நோக்கி நகர்ந்தார்கள். அவ்வாறு நகர்ந்தது தன்னுடைய வயிற்றை மதிலோடு ஒட்டக்கூடிய அமைப்பில் ஆக்கியது. அப்போது அவ்வாடு நபியவர்களுக்குப் பின்புறத்தால் சென்றது.

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு அறிஞர்கள் கால்நடைகள் தொழுகையாளியைக் கடக்க நாடினால் அவை தடுக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றார்கள். அவ்வாறு கடக்கின்ற நேரத்தில் தடுக்கப்பட்ட போதும் அவை கடந்து செல்ல நாடினால் நபியவர்கள் செய்தததைப் போன்று நாமும் செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றார்கள். மேலும், இச்செய்தியை வைத்து சிறு குழந்தைகள் தொழுகையாளியைக் கடக்க நாடினாலும் அவைகளையும் இவ்வாறான அமைப்பில் தடுக்க வேண்டும் என்றும் தங்களுடைய விளக்கங்களில் கூறியுள்ளார்கள்.

–   இன்ஷா அல்லாஹ் தொடரும்.

–   தொகுப்பு: அபூஹுனைப்