நபிவழியில் ஜனாஸாத் தொழுகை – 02

بسم الله الرحمن الرحيم

8. இரண்டாவது தக்பீருக்குப் பின் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும்.

இரண்டாவது தக்பீருக்குப் பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும் என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஒரு நபித்தோழர் பின்வருமாறு கூறுகின்றார்: “ஜனாஸாத் தொழுவிக்கும்போது இமாம் தக்பீர் கூறி குர்ஆனின் ஆரம்பமாகிய சூரதுல் பாதிஹாவை முதலாவது தக்பீருக்குப் பின்  தனது உள்ளத்தால் சத்தமின்றி ஓதி பின்பு ஏனைய மூன்று தக்பீர்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறி,  ஜனாஸாவுக்கு உளத்தூய்மையுடன் துஆச் செய்வதும் சுன்னாவாகும். அவைகள் எதிலும் குர்ஆன் ஓதப்படக்கூடாது. பின்பு வலது பக்கம் திரும்பும்போது தனது உள்ளத்தால் இரகசியமாக ஸலாம் கூற வேண்டும். பின்னால் இருப்பவர்கள் இமாம் செய்வதுபோல் செய்வது  சுன்னாவாகும்.” (பைஹகி, ஹாகிம்) அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தியை ஸஹீஹானது என்று கூறியுள்ளார்கள்.

அத்தஹிய்யாத் இருப்பில் ஓதப்பட வேண்டி ஸலவாத்தை ஓதுவது விரும்பத்தக்கது என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். கடைசி அத்தஹிய்யாத் இருப்பில் ஓதப்பட வேண்டிய ஸலவாத்தைப்போன்று ஸலவாத் கூற வேண்டும் என்று அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்: “ஜனாஸாத் தொழுகையில் இதற்கென்று ஒரு குறிப்பிட்ட அமைப்பில்லை என்பதே வெளிப்படையான கருத்தாகும். மாறாக, கடமையான தொழுகைகளில் அத்தஹிய்யாத் இருப்பில் (ஸலவாத்) கூறுவதற்கு உறுதியாக இடம்பெற்ற அமைப்புக்களில் ஒன்றைக் கூற வேண்டும்” என்று கூறியிருக்கின்றார்கள். அதைவிடக் குறைவாக “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்” என்று கூறினாலும் அது செல்லுபடியாகும் என்றும் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

9. மூன்றாவது தக்பீரைக் கூறி பின்பு மரணித்தவருக்காக துஆச் செய்ய வேண்டும்.

முன்பு குறிப்பிடப்பட்ட அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தியை ஆதாரமாகக் கொண்டு மூன்றாவது தக்பீருக்குப் பின் மரணித்தவருக்காக துஆச் செய்ய வேண்டும் என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தவருக்காக ஜனாஸாத் தொழுகையில் ஓதுவதற்கு சில துஆக்களைக் கற்றுத்தந்துள்ளார்கள். அந்த துஆக்களை மனனம் செய்து அவைகளை மரணித்தவருக்காக ஓதுவது விரும்பத்தக்கது. ஹதீஸ்களில் இடம்பெறாத துஆக்களையும் மரணித்தவருக்காக ஓதலாம் என்றும் அறிஞர்கள் கூறியுள்ளனர். இக்கருத்தை இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இமாம்களின் ஒன்றுபட்ட கருத்தாகக் கூறியிருக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தந்த துஆக்களை ஓதுவது மிகவும் சிறப்பு வாய்ந்தவை என்றும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் மரணித்தவருக்காகத் தொழுதால் அவருக்கு துஆச் செய்வதில் உளத்தூய்மையுடன் செயற்படுங்கள்!” (அபூதாவூத்) இது ஹஸன் என்ற தரத்தில் அமைந்த ஒரு செய்தியாகும். இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே அறிஞர்கள் ஹதீஸ்களில் மரணித்தவருக்காக ஓதுவதற்கென்று இடம்பெற்ற துஆக்களின்றி பொதுவான துஆக்களை ஓதிக்கொள்ளலாம் என்று கூறியிருக்கின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  ஓதிய சில துஆக்கள்:

اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطيا كما نقيت الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وأدخله الجنة وقه فتنة القبر وعذاب النار.

இந்த துஆ முஸ்லிம் என்ற கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تضلنا بعده.

இந்த ஹதீஸ் அபூதாவூத், திர்மிதி ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. இது ஹஸன் என்ற தரத்தைப் பெற்றிருக்கின்றது.

10. நான்காவது தக்பீரைக் கூற வேண்டும்.

மரணித்தவருக்காக துஆச் செய்த பின்பு நான்காவது தக்பீரைக் கூற வேண்டும். நான்காவது தக்பீரில் துஆக்கள் ஓதலாமா? முடியாதா? என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. சில அறிஞர்கள் ஓத முடியாது என்றும் அவர் அமைதியாக இருந்துவிட்டு பின்பு ஸலாம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றார்கள். இக்கருத்தை அஷ்ஷெய்ஹ் இப்னு பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். ஷவ்கானி, அல்பானி, இப்னு உஸைமீன் ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் நான்காவது தக்பீருக்குப் பின் துஆச் செய்வது விரும்பத்தக்கது என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். அவர்கள் பின்வரும் செய்தியை ஆதாரமாக முன்வைக்கின்றார்கள். அப்துல்லாஹ் இப்னு அபீஅவ்பா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்கு தக்பீர்களைக் கூறுவார்கள். பின்பு சற்று நேரம் இருப்பார்கள். அல்லாஹ் அவர்கள் கூறுவதற்கு எந்தளவு நாடினானோ அந்தளவு அவர்கள் சிலவற்றைக் கூறுவார்கள். பின்பு ஸலாம் கொடுப்பார்கள்.” (இப்னுமாஜா) அஷ்ஷெய்ஹ் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இச்செய்தி குறித்து ஹஸன் என்று கூறியிருக்கின்றார்கள்.

முன்பு குறிப்பிடப்பட்ட அபூஉமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தியும் மரணித்தவருக்கு துஆச் செய்வது விரும்பத்தக்கது என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. எனவே, நான்காவது தக்பீருக்குப் பின்பு துஆக்களை ஓதுவது விரும்பத்தக்கது என்ற கருத்தை நாம் சரிகாணலாம்.

இரண்டாவது தக்பீருக்குப் பின்பு ஓதப்படக்கூடிய துஆக்களை இரண்டாவது தக்பீருக்கு மாத்திரம் குறிப்பாக்காமல் மூன்றாவது தக்பீருக்குப் பின்பு அல்லது நான்காவது தக்பீருக்குப் பின்பு அல்லது இரண்டாவது தக்பீரில் ஸலவாத் ஓதிய பின்பு ஓதிக்கொள்ளலாம் என்று இப்னு ஹிஸாம் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதற்கு ஆதாரமாக அவர்கள் அபூஉமாமா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் செய்தியை குறிப்பிட்டுள்ளார்கள்.

நான்காவது தக்பீருக்குப் பின்பு துஆ ஓதுவது வாஜிபல்ல. மாறாக விரும்பத்தக்கதாகும். யாராவது நான்காவது தக்பீருக்குப் பின்பு மௌனமாக இருந்தால் அவருடைய தொழுகை செல்லுபடியாகும்.

11. ஸலாம் கொடுக்க வேண்டும்.

நான்காவது தக்பீரில் துஆ ஓதிய பின்பு அல்லது சில நேரம் மௌனமாக இருந்த பின்பு ஸலாம் கொடுக்க வேண்டும்.

ஸலாம் கொடுக்கும்போது ஒரு ஸலாம் கொடுக்கப்பட வேண்டுமா? அல்லது, ஏனைய தொழுகைகளைப் போன்று இரண்டு ஸலாம் கொடுக்க வேண்டுமா? என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது.

இப்னு உமர், அபூஉமாமா, வாஸிலா இப்னுல் அஸ்கஃ ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர் ஒரு ஸலாம் கொடுத்ததாக ஸஹீஹான செய்திகளில் உறுதியாகியுள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ஸலாம் கொடுத்ததாக ஹாகிம், பைஹகி, தாரகுத்னி ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது. என்றாலும், இது ஸஹீஹான ஒரு செய்தியல்ல என்று இப்னு ஹிஸாம் ஹபிழஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள்.

இரண்டு ஸலாம் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கு பின்வரும் செய்தி மிகவும் தெளிவான ஆதாரமாக அமைந்திருக்கின்றது. இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “மூன்று விடயங்கள் இருக்கின்றன. அவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்து வந்தார்கள். மனிதர்கள் அவற்றை விட்டிருக்கின்றார்கள். அவைகளில் ஒன்று: தொழுகையில் ஸலாம் கொடுப்பது போன்று ஜனாஸாத் தொழுகையில் ஸலாம் கொடுப்பதாகும்.” (பைஹகி) இச்செய்தியை அஷ்யெ;ஹ் அல்பானி மற்றும் முக்பில் ரஹிமஹுமல்லாஹ் ஆகியோர் ஹஸன் என்று கூறியிருக்கின்றார்கள்.

ஆகவே, இரண்டு ஸலாம் கொடுப்பதே மிகவும் சரியான கருத்தாகும் என்பதை இச்செய்தி தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இக்கருத்தை இப்னு ஹஸ்ம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சரிகண்டுள்ளார்கள்.

ஏனைய தொழுகைகள் போன்று ஜனாஸாத் தொழுகையிலும் ஸலாம் கொடுப்பது அதன் தூண்களில் ஒன்றாகும். முதலாவது ஸலாம் அதனுடைய தூண்களில் ஒன்றாகவும் இரண்டாவது ஸலாம் விரும்பத்தக்கதாகவும் இருக்கின்றது.

குறிப்பு: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நான்கு தக்பீர்கள் கூறியதாகவே அதிகமான ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளன. முஸ்லிம் என்ற கிரந்தத்தில் இடம்பெறக்கூடிய ஸைத் இப்னு அர்கம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஐந்து தக்பீர்கள் கூறியதாக பதிவாகியுள்ளது. சிலவேளை ஐந்து தக்பீர்களும் கூறலாம் என்று அஹ்மத், இஸ்ஹாக், இப்னு ஹஸ்ம் ஆகிய அறிஞர்கள் கூறியுள்ளனர்.

ஐந்தாவது தக்பீருக்குப் பின்பு துஆக்கள் ஓதுவது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் எச்செய்தியும் பதிவாகவில்லை. ஐந்தாவது தக்பீருக்குப் பின்பு ஸலாம் கொடுப்பதே மிகச் சரியான கருத்தாகும். எவராவது ஐந்தாவது தக்பீருக்குப் பின்னால் துஆக்கள் ஓதினால் அவற்றை நாம் கண்டிக்கவும் முடியாது.

அல்லாஹ் மிக அறிந்தவன்