வெள்ளிக்கிழமையில் பெருநாள் தினம் வந்தால்…

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்ஹ் இப்னுபாஸ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்:

“வெள்ளிக்கிழமையில் பெருநாள் தினம் ஏற்பட்டால், பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டவர்கள் ஜும்ஆவைத் தொழ முடியும் அல்லது ளுஹரைத் தொழலாம். ஏனெனில், இவ்வாறு செய்வது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தொட்டும் உறுதிசெய்யப்பட்டிருக்கின்றது. பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டவர்களுக்கு ஜும்ஆவில் கலந்துகொள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சலுகை வழங்கியதாக அவர்களைத் தொட்டும் ஹதீஸ்களில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

‘உங்களுடைய இத்தினத்தில் இரு பெருநாட்கள் ஒன்று சேர்ந்துவிட்டன. எனவே, பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டவர்களுக்கு ஜும்ஆ கடமையாகாது’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ஆனாலும், ளுஹர் தொழுகையை தொழாமல் விட முடியாது. ஜும்ஆத் தொழுகையை தொழுவது சிறப்பானது. ஜும்ஆத் தொழாவிட்டால் ளுஹரைத் தொழ வேண்டும். இமாமைப் பொறுத்தவரையில், அவர் உட்பட ஜும்ஆவில் கலந்துகொண்டவர்கள் மூன்று நபர்களாக அல்லது அதற்கும் அதிகமானவர்களாக இருந்தால் அவர் ஜும்ஆத் தொழுகையில் கலந்துகொண்டவர்களுடன் நிறைவேற்ற வேண்டும். அவரோடு ஒருவர் மாத்திரம் இருந்தால், அவர்கள் இருவருமே ளுஹரைத் தொழ வேண்டும்”.