அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய செயல்கள்.

بسم الله الرحمن الرحيم

அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய செயல்கள் பல உள்ளன. அவற்றை நாம் கண்டறிந்து செயற்படுவோமென்றால் அவனின் கருணை நிச்சயமாக எங்களையும் வந்தடையும். அந்தவிதத்தில் அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய சில செயல்களை இங்கு நாம் இனங்காட்டுகின்றோம்.

01. படைப்பினங்கள் மீது கருணை காட்டல்.

அல்லாஹ்வின் படைப்புகள் மீது கருணை காட்டுவது அவனின் கருணையை எமக்குத் தேடித்தரும்.

நபியவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுங்கள்! வானத்தில் உள்ளவர்கள் உங்களுக்குக் கருணை காட்டுவார்கள்”. (அபூதாவுத்)

இன்னும் நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் கருணை காட்டுபவர்களுக்கே கருணை காட்டுவான்”. (ஸஹீஹுல் ஜாமிஉ)

மேலும் நபியவர்கள் கூறினார்கள்: “இன்னும், ஆட்டிற்கு நீ கருணை காட்டினால், அல்லாஹ் உனக்குக் கருணை காட்டுவான்”. (அஸ்ஸில்ஸிலா அஸ்ஸஹீஹா)

02. நல்லுபகாரம் செய்தல்.

பிறருக்கு நல்லுபகாரம் செய்வதும் அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடியதாக உள்ளது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “நிச்சயமாக அல்லாஹ்வின் கருணை நல்லுபகாரம் செய்வோருக்கு மிக சமீபத்தில் உள்ளது”. (அல் அஃராப்: 56)

03. அல்லாஹ்வின் தூதர் அவர்களைப் பின்பற்றல்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “நீங்கள் கருணை காட்டப்படும் பொருட்டு தூதருக்குக் கீழ்படியுங்கள்”. (அந்நூர்: 56)

04. விற்கும் போதும் வாங்கும் போதும் விட்டுக்கொடுப்போடு நடந்து கொள்ளல்.

நபியவர்கள் கூறினார்கள்: “விற்கும் போதும், வாங்கும் போதும், உரிமையை வேண்டும் போதும் விட்டுக்கொடுப்போடு நடந்து கொள்ளும் மனிதனுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக!”. (புகாரி)

05. நோயாளியை நோய் விசாரிக்கச் செல்லல்.

ஒரு முஸ்லிம் நோயுற்ற தனது சகோதரனை நோய் விசாரிக்கச் செல்வது அவன் மீதுள்ள கடமையாகும். அவ்வாறு செல்வதின் மூலம் அவனுக்கு அல்லாஹ்வின் கருணை கிடைக்கின்றது.

நபியவர்கள் கூறினார்கள்: “யார் ஒரு நோயாளியை நோய் விசாரிக்கச் செல்கிறாரோ அவர் கருணையில் மூழ்கிவிட்டார்”. (அஸ்ஸஹீஹா)

06. இரவில் எழுந்து தொழுதலும் அதற்காகத் தனது குடும்பத்தினரை எழுப்பிவிடுதலும்.

நபியவர்கள் கூறினார்கள்: “அல்லாஹுத்தஆலா ஒரு மனிதன் மீது கருணை காட்டுவானாக! அம்மனிதன் இரவில் எழுந்து தானும் தொழுது, தன்னுடைய மனைவியையும் தொழுகைக்காக எழுப்பிவிடுகிறான். அவ்வாறு அவள் எழும்ப மறுத்தால், அவளுடைய முகத்தில் நீரைத் தெளித்துவிடுகிறான்”. (அபூ தாவுத்)

07. ஹஜ் கடமையின் போது தலை முடியை முழுமையாக வழித்தல்.

நபியவர்கள் ஹஜ் கடமையின் போது தலையை முழுமையாக வழித்த தோழர்கள் குறித்து: “அல்லாஹ்வே! தலையை வழித்தவர்களுக்கு நீ கருணை காட்டுவாயாக!” என்று மூன்று முறைகள் பிரார்த்தனை செய்தார்கள். (புகாரி)

08. அல்லாஹ்வை நினைவுகூறும் சபைகளில் பங்கேற்றல்.

நபியவர்கள் கூறினார்கள்: “சபையாக வீற்றிருந்து அல்லாஹ்வை ஞாபகப்படுத்தும் ஒரு கூட்டத்தை மலக்குகள் சூழ்ந்து கொள்வார்கள், கருணையும் அக்கூட்டத்தில் உள்ளவர்களை மூடிக்கொள்ளும்”. (முஸ்லிம்)

09. பள்ளிவாசலில் உட்காருதல்

நபியவர்கள் கூறினார்கள்: “தொழுகையாளி அவர் தனது தொழுமிடத்தில் வீற்றிருக்கும் காலமெல்லாம் அவருக்காக மலக்குகள் பாவமன்னிப்புத் தேடுவார்கள். அவர்கள் அச்சந்தர்ப்பத்தில்: அல்லாஹ்வே! அவரை மன்னிப்பாயாக! அல்லாஹ்வே! அவர் மீது கருணை காட்டுவாயாக!” எனப் பிரார்த்தனை செய்வார்கள். (புகாரி, முஸ்லிம்)

10. நபியவர்களின் ஹதீஸ்களை செவிமடுத்தலும் அவற்றை எத்திவைத்தலும்.

நபியவர்கள் கூறினார்கள்: “எங்களில் இருந்து ஒரு விடயத்தைக் கேட்டுவிட்டு, அதனைக் கேட்டவாறு எத்திவைக்கின்ற ஒருவருக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக!” (ஸஹீஹுல் ஜாமிஇ)

11. அல்குர்ஆனை செவிதாழ்த்திக் கேட்டல்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்! அப்பொழுது நிசப்தமாக இருங்கள்! (இதனால்) நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்!” (அல்அஃராப்: 204)

12. “அல்ஹம்து லில்லாஹ்” என்ற வார்த்தையை அதிகமாகக் கூறல்.

நபியவர்கள் கூறினார்கள்: “அடியான் அல்ஹம்து லில்லாஹி கஸீரா என்று கூறினால்: என்னுடைய அடியானுக்காக அதிகமாக எனது கருணையை எழுதுங்கள்! என்று அல்லாஹ் பணிப்பான்”. (அஸ்ஸஹீஹா)

மதிப்புக்குரிய சகோதரர்களே! அல்லாஹ்வின் கருணை எம்மனைவருக்கும் மிக அவசியமானது. அவனின் கருணையின்றி எம்மில் எவருக்கும் ஈடேற்றம் பெற்றுவிட முடியாது. எனவே, அதனைப் பெற்றிட நாம் ஆதாரங்களின் அடிப்படையில் குறிப்பிட்டவற்றை செயல்படுத்துவோமாக!

والحمد لله رب العالمين

–              அபூ ஹுனைப் (மதனி)