அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து ஈடேற்றம் பெற…!

بسم الله الرحمن الرحيم

எமக்கு முன்வாழ்ந்த சமுகங்கள் விடயத்தில் அல்லாஹ்வுடைய வழிமுறையானது, அவனது சட்டதிட்டங்களுக்கு எவர்கள் மறுசெய்கின்றார்களோ அவர்கள் மீது தனது தண்டனையை இறக்கிவைப்பதாகும். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில் நபிமார்களுடன் அவர்களது சமுதாயத்தினர் எப்படி முரண்பட்டுச் செயற்பட்டனர் என்றும், அப்போது அவர்களுக்கு எத்தகைய தண்டனைகள் வழங்கப்பட்டன என்றும் பிரஸ்தாபித்துள்ளான்.

நாம் ஒரு கனம் அல்குர்ஆனை சிந்தித்து ஆராய்ந்து பார்த்தால், மனிதர்களை அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து பாதுகாக்கக்கூடிய பல வழிகள் கூறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டுகொள்ளலாம். அந்தவிதத்தில்; திருக்குர்ஆன் கூறும் சில வழிகளை இங்கு நாம் விபரிக்கின்றோம்.

01. அல்லாஹ்வை உரிய முறையில் விசுவாசம் கொள்ளல்.

அதாவது, அல்லாஹ்வை அவனது ருபூபிய்யத்துடன் தொடர்புடைய ஏகத்துவத்தைக் கொண்டும், உழுஹிய்யத்துடன் தொடர்புடைய ஏகத்துவத்தைக் கொண்டும், அல்அஸ்மாஉ வஸ்ஸிபாத்துடன் தொடர்புடைய ஏகத்துவத்தைக் கொண்டும் விசுவாசம் கொள்வதாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்;: “பின்னர் எங்களுடைய தூதர்களையும் அவ்வாறே விசுவாசம் கொண்டவர்களையும் நாம் காப்பாற்றுவோம். விசுவாசிகளைக் காப்பாற்றுவது எங்கள் மீதுள்ள கடமையாகும்”. (யூனுஸ்: 103)

02. குழப்பங்களை நீக்குவதும், சீர்திருத்தத்தை நிலைநாட்டுவதும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “மேலும், உம்முடைய இரட்சகன் கிராமங்களை அநியாயமாக அழிப்பவனில்லை. அவற்றில் வாழ்பவர்கள் சீர்திருத்தவாதிகளாக இருக்கும் காலமெல்லாம்…”. (ஹூத்: 117)

03. அல்லாஹ்வுடை வேதனை குறித்து அச்ச உணர்வுடன் இருத்தலும், வீண்விளையாட்டுக்கள் மற்றும் கேலிக்கைகளை விட்டும் தூரமாதலும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “(நபியே நிராகரித்த) அவ்வூர்களை உடையவர்கள் (தங்கள் வீடுகளில்) இரவில் அவர்கள் நித்திரை செய்து கொண்டிருக்கும் நிலையில் நம்முடைய வேதனை அவர்களிடம் வந்துவிடுவதைப் பற்றி அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா? அல்லது (நிராகரித்த) அவ்வூர்களை உடையவர்கள் (கவலையற்று) முற்பகலில் விளையாடிக் கொண்டு பராமுகமாக அவர்கள் காரியங்களில் ஈடுபட்(டிருக்கும் நிலையில்) நம்முடைய வேதனை அவர்களிடம் வந்துவிடுவதைப் பற்றி அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய சமுகத்தாரைத் தவிர (எவரும்) அல்லாஹ்வின் சூழ்ச்சியை அச்சமற்றிருக்கமாட்டார்கள்”. (அல் அஃராப்: 97-99)

இமாம் கதாதா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வைக் கொண்டு ஏமாற்றப்படும் விடயத்தில் எச்சரிக்கையா இருந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் ஒரு கூட்டத்தின் மீது தண்டனையை இறக்குவான், அக்கூட்டமோ மதிமயக்கத்திலும் கேலிக்கையிலும் வீண்விளையாட்டிலும் மூழ்கியிருக்கும்”.

04. பாவமன்னிப்புத் தேடல்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “நீர் அவர்களுக்கு மத்தியலிலுக்கும் நிலையில் அல்லாஹ் அவர்களை (ஒரு போதும்) வேதனை செய்பவனாக இல்லை. இன்னும், அவர்கள் பாவமன்னிப்பைக் கோரிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ் அவர்களை வேதனை செய்பவனாக இல்லை”. (அல் அன்பால்: 33)

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்: “அந்த இரண்டும் அமானிதங்களாகும். (ஒன்று) நபியவர்கள் அவர்களுக்கு மத்தியில் காணப்படுவது, (மற்றையது) தவ்பாவும் இஸ்திக்பாருமாகும்”.

05. அல்லாஹ்விடத்தில் அதிகமாகத் தாழ்மையை வெளிப்படுத்துவதும், அவனிடத்தில் பிரார்த்தனை செய்வதும், ஆதரவு வைப்பதும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “இன்னும் (நபியே) உமக்கு முன்னர் பல சமுகத்தாருக்கும் நாம் (நம்முடைய) தூதர்களை நிச்சயமாக அனுப்பி வைத்தோம். (எனினும், அத்தூதர்களை அவர்கள் நிராகரித்து விட்டனர். ஆகவே,) அவர்கள் பணிந்து வருவதற்காக வறுமையைக் கொண்டும், நோயைக் கொண்டும் நாம் அவர்களைப் பிடித்தோம்”. (அல் அன்ஆம்: 42)

06. நன்மையை ஏவுவதும், தீமையைத் தடுப்பதும்.

நபியவர்கள் கூறினார்கள்: “நீங்கள் நல்லவற்றைக் கொண்டு ஏவுங்கள்! மேலும், தீயவற்றை விட்டும் தடுங்கள்! அல்லது, அல்லாஹ் உங்கள் அனைவரையும் ஒன்றாகச் சோர்த்து பொதுவான தண்டனையைக் கொண்டு பிடிப்பான். அப்போது நீங்கள் பிரார்த்தனை செய்தாலும் உங்களுக்கு பதிலளிக்கப்படமாட்டாது”. (ஸஹீஹுத் தர்கீப்)

07. அநியாயத்தை இல்லாமல் செய்வதும், எச்சந்தர்பத்திலும் அநியாயத்தை விட்டும் விலகி நடப்பதும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “ஊர்களை – அவை அநியாயம் செய்து கொண்டிருக்க (வேதனையைக் கொண்டு) அவன் பிடித்தால், உம்முடைய இரட்சகனின் பிடி இப்படித்தான் இருக்கும். நிச்சயமாக அவனது பிடியானது தும்புறுத்தக்கூடியது, மிக்க கடினமானது”. (ஹூத்: 102)

08. சத்தியத்தில் அனைவரும் ஒன்றிணைதலும், நேர்வழியின் மீது அவ்வணியை ஒருமுகப்படுத்தலும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “மேலும் நீங்கள் உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள்! அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்துவிடுவீர்கள்! மேலும், வலிமை குன்றிவிடும்.” (அல் அன்ஃபால்: 46)

09. மார்க்க சட்டதிட்டங்களில் குறைவை ஏற்படுத்த முயற்சி செய்யாதிருத்தல்.

தேவையான சந்தர்ப்பங்களில் மாத்திரம் மார்க்கப் போதனைகளை எடுப்பதும், தனக்கு பிடித்தமான சட்டதிட்டங்களில் மாத்திரம் ஆர்வம் கொள்வதும், வணக்க வழிபாடுகள் விடயத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பதும், மார்க்கம் பூரணப்படுத்தப்படவில்லை, அல்லது நவீன காலத்திற்கு தக்க வழிகாட்டல்கள் மார்க்கத்தில் இடம்பெறவில்லை என்ற எண்ணத்தில் செயற்படுவதும் இப்பிரிவுக்குள் உள்ளடங்குகின்றன.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “ஆகவே, நீங்கள் வேதத்தில் சிலவற்றை விசுவாசித்து (மற்றும்) சிலவற்றை நிராகரிக்கின்றீர்களா? உங்களில் இதைச் செய்கின்றவருக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத்தவிர வேறு கூலி இல்லை. இன்னும், மறுமை நாளில் அவர்கள் மிகக் கடுமையான வேதனையின் பால் திருப்பப்படுவார்கள்”. (அல் பகரா: 85)

10. மனக்கேடான காரியங்களை இஸ்லாமிய சமுகத்திற்கு மத்தியில் பரப்பாது இருத்தல்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றன்: “(இதற்குப் பின்னரும்) விசுவாசங்கொண்டோருக்கிடையில் (இவ்வாறான) மானக்கேடான விடயம் பரவவேண்டுமென விருப்புகிறார்களே! நிச்சயமாக அத்தகையோர் அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் மிக்க தும்புறுத்தும் வேதனையுண்டு”.   (அந்நூர்: 24)

எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! அல்லாஹுத்தஆலாவுடைய தண்டனையில் இருந்து எம்மைத் தற்காத்துக் கொள்வது எமது பாரிய பொறுப்பாகும். அதற்கான சில வழிகளைத்தான் நாம் இங்கு குறிப்பிட்டுள்ளோம். அவற்றின் உள்ளடக்கங்களை நன்கு விளங்கி நல்ல முறையில் செயற்பட வல்ல அல்லாஹ் எமக்கு அருள்பாலிப்பானாக!

والحمد لله رب العالمين