மூன்றைத் தவிர்த்து மூன்றைப் பேணி நடப்போம் – 01

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுத்தஆலா முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அகிலத்தாருக்கு அருளாக அனுப்பியுள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான்: “(நபியே!) உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை”. (அல் அன்பியா: 107)

மேலும், நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நான் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட அருளாவேன்”. (அல் மிஷ்காத்)

மேற்கூறப்பட்ட ஹதீஸின் அடிப்படையில் நபியவர்கள் அல்லாஹ்வினால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்ட அருளாக உள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே, எவர் அல்லாஹ்வின் அன்பளிப்பை ஏற்றுக் கொள்கிறாரோ நிச்சயமாக அவர் வெற்றியடைந்துவிட்டார்.

இன்னும், நபியவர்கள் ஓர் ஆசிரியராகவும் இவ்வுலகில் தோன்றினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் கடும் சிரமத்தில் ஆழ்த்துபவராக என்னை அனுப்பவில்லை. என்றாலும், என்னை இலகுபத்தும் ஓர் ஆசிரியராக அனுப்பியுள்ளான்”. (ஸஹீஹுல் ஜாமிஉ)

நபியவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் பாக்கியங்களில் ஒன்றுதான், விரிவான கருத்துக்களை உள்ளக்கிய விதத்தில் குறுகிய வார்த்தைகளைக் கொண்டு பேசுவதாகும். அத்தகைய வார்த்தைப் பிரயோகங்களில் ஒன்றே நாம் விளக்கத்திற்காக எடுத்துக் கொண்ட பின்வரும் நபிமொழியாகும்.

“நிச்சயமாக அல்லாஹ் உங்களிடமிருந்து மூன்று விடயங்களை பொருந்திக் கொள்கின்றான். மேலும், மூன்று விடயங்கள் குறித்து கோபம் கொள்கின்றான். அந்த விதத்தில், அவன் உங்களிடமிருந்து பொருந்திக் கொள்பவை, நீங்கள் அவனை வணங்குவதும் அவனுக்கு எந்த ஒன்றைக் கொண்டும் இணைவைக்காமல் இருப்பதும், நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்வதும், உங்களுடைய விடயங்களுக்கு அல்லாஹ் யாரைப் பொறுப்பாக்கியுள்ளானோ அவருக்கு உபதேசம் செய்வதுமாகும். மேலும், சொல்லப்படும் செய்திகளை விசாரிக்காமல் கதைப்பதையும், அதிகமாகக் கேள்வி கேட்பதையும், பணத்தை வீண்விரயம் செய்வதையும் உங்களுக்கு மத்தியில் அல்லாஹ் வெறுக்கின்றான்”. (அல்அதபுல் முப்ரத்)

இப்படியான நற்செய்திகளைச் செவிமடுக்கும் தருணத்தில் முஃமினானவன் அதனை நிலைநாட்ட முயற்சி செய்வான். மேலும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தில் ஆர்வம் கொண்டு செயலில் இறங்குவான். இன்னும், அவனுக்குக் கோபத்தை ஏற்படுத்தக்கூடியவற்றை விட்டும் தூரமாகுவான்.

அல்லாஹுத்தஆலா பொருந்திக் கொள்ளக்கூடிய அம்சங்களில் முதலாவதாக அவனை வணங்குவதும், அவனுக்கு எந்த ஒன்றைக் கொண்டும் இணைவைக்காமல் இருப்பதுமாகும். இதனை நிலைநாட்டும் முகமாகவே அல்லாஹ் எம்மைப் படைத்துள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான்: “இன்னும் ஜின் இனத்தையும், மனித இனத்தையும் என்னை வணங்குவதற்காகவன்றிப் படைக்கவில்லை”. (அத்தாரியாத்: 56)

பொதுவாக ஒரு வணக்கம் செல்லுபடியானதாக அமைவதற்கு இரு நிபந்தனைகள் உள்ளன.

1. மனத்தூய்மை (இஹ்லாஸ்): இதுவே ஏகத்துவமாகும். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும், மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்ட வேண்டும், இன்னும் ஸகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறேதும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை”. (அல் பையினா: 05)

2. நபிவழியைப் பின்பற்றியதாக இருத்தல்: நபியவர்கள் கூறினார்கள்: “யார் எங்களது இவ்விடயத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகின்றாரோ அது நிராகரிக்கப்படும்”. (புகாரி), மேலும் கூறினார்கள்: “எங்களது கட்டளை இல்லாத ஒரு செயலை யார் செய்கின்றாரோ அது நிராகரிக்கப்படும்”. (முஸ்லிம்)

இவ்விரு நிபந்தனைகளைத் தழுவாத விதத்தில் நாம் புரியக்கூடிய எக்காரியமாக இருந்தாலும் அது நிராகரிக்கப்படும் என்பதை நன்கு விளங்கிக் கொள்க! அக்காரியம் நன்நோக்கில் புரியப்பட்டாலும் சரியே! அதற்கு எப்பெருமதியும் கிடையாது. இதனை விளங்கிக் கொள்ள சிறந்த எடுத்துக்காட்டாக, நபியவர்களின் அன்றாட வாழ்வைப் பற்றி விசாரணை செய்த மூன்று ஸகாபாக்களின் சம்பவத்தைக் குறிப்பிடலாம். அவர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு தீர்மானத்தை எடுத்துக் கொண்டனர். ஒருவர் பகல் பூராகவும் நோன்பு நோற்கப் போவதாகவும், மற்றவர் இரவு முழுவதும் நின்று வணங்கப் போவதாகவும், அடுத்தவர் திருமணம் முடிக்காமல் வாழ்நாள் முழுவதையும் மார்க்கத்திற்காகத் தியாகம் செய்யப்பேவதாகவும் தீர்மானித்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரினதும் நோக்கம் நல்லதாக இருந்தது. ஆனாலும், நபியவர்கள் அவர்களின் நோக்கத்தைப் பார்க்கவில்லை. மாறாக, அவர்களின் தீர்மானங்கள் மேற்கூறப்பட்ட நிபந்தனைகளைத் தழுவியதாக காணப்படாததால் அவற்றை நிராகரித்து விட்டார்கள். இப்படித்தான் இன்று எம்சமுகத்திற்கு மத்தியில் காணப்படக்கூடிய ஒவ்வொரு பித்அத்தையும் பார்க்க வேண்டும். அவை நன்நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் செல்லுபடியற்றவை என்பதை உணர்ந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் அல்லாஹ் எம்மத்தியில் பொருந்திக் கொள்ளக்கூடிய விடயங்களில் அடுத்த இடத்தை வகிப்பது நாம் அனைவரும் அல்லாஹ்வின் கயிற்றை இறுகப்பற்றிப் பிடித்துக் கொள்வதாகும். இங்கு அல்லாஹ்வின் கயிறு என்பதன் மூலம் அல்குர்ஆன், ஜமாஅத் கட்டமைப்பு மற்றும், அதன் தலைமை ஆகியன நாடப்படுகின்றன.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “மேலும் நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! (உங்களுக்குள் கருத்துவேறுபட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்”. (ஆலு இம்ரான்: 103)

எனவே, இத்தகைய விடயங்களைப் பேணி நடப்பது கட்டாயமாகும். இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “தலைவருக்கு செவி சாய்ப்பதையும், வழிப்படுவதையும் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! நிச்சயமாக ஜமாஅத் கட்டமைப்புடன் இருக்கும் போது நீங்கள் அதில் வெறுக்கக்கூடியது, அதைவிட்டும் பிரிந்து சென்று நீங்கள் விரும்பக்கூடிய நலவைவிட மிகச் சிறந்ததாகும்”.

எம்சமுகத்திற்கு மத்தியில் காணப்படக்கூடிய பிளவை ஏற்படுத்தும் அழைப்பாளர்கள் விடயத்தில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்! அவர்கள் அழகிய வார்த்தைகளைக் கொண்டு உணர்ச்சி ததும்பப் பேசுவார்கள். யதார்த்தத்தில் அதன் சாராம்சம் பிளவு, குழப்பம் ஆகியவற்றைத்தவிர வேறில்லை.

இன்னும், அல்லாஹ் பொருந்திக் கொள்ளக்கூடிய விடங்களில் அடுத்த அம்சமாவது, எங்களுடைய விவகாரம் யாருடைய கரத்தில் கொடுக்கப்பட்டுள்ளதோ அவருக்கு உபதேசம் செய்வதாகும்.

நபியவர்கள் கூறினார்கள்: “மார்க்கம் என்பது உபதேசமாகும். அதற்கு நாங்கள்: அவ்வுபதேசம் யாருக்குரியது என்று கேட்க, அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்திற்கும், அவனுடைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் உள்ள பொதுமாக்களுக்குமாகும் என்று பதிலளித்தார்கள்”. (முஸ்லிம்)

பொதுவாக, தலைவருக்குக் கட்டுப்படுவதென்பது நல்ல வியங்களில் அவர்களுடன் உடன்பட்டுச் செயற்படுவதும், தீயவற்றை அவரில் காணும் போது மிகப் பொருத்தமான வழிமுறையைப் பயன்படுத்தி அவருக்கு அவற்றை உணர்த்துவதுமாகும். மாறாக, அவற்றைக் காரணம் காட்டி அவரை விட்டும் வெளிக்கிளம்பிச் செல்வதல்ல!

தலைவருக்குக் கட்டுப்படுவது உள்ளத்தாலும், நாவாலும் வெளிப்படுகிறது. அந்தவிதத்தில், அவரை நேசிப்பது உள்ளத்தால் கட்டுப்படுவதாகவும், அவருக்காக துஆச் செய்வதும், மக்கள் மன்றத்தில் அவரின் நலவுகளை எடுத்துரைப்பதும் நாவால் கட்டுப்படுவதாக அமைகின்றது. மாற்றமாக, மிம்பர் மேடைகளில் தலைவரின் குறைகளை பகிரங்கமாகப் பேசுவதும், தனிப்பட்ட விதத்தில் மூடிய அமர்வுகளை ஏற்படுத்தி மக்களை மூளைச்சலவை செய்வதும் இதற்கான வழிமுறையன்று. நேரடியாக உபதேசம் செய்ய முடியுமானவர்கள் நேரடியாகவும், முடியாதவர்கள் தமது உபதேசத்தைப் பதிவு செய்து அனுப்புவதின் மூலமாக இப்பணியை மேற்கொள்வதே உத்தமமாகும்!

–    இன்ஷா அல்லாஹ் தொடரும்

–    அபூ ஹுனைப்