இஸ்லாத்தின் பார்வையில் உண்மையான நஷ்டவாளிகள் யார்? -01

بسم الله الرحمن الرحيم

அல்லாஹுதஆலா கூறுகின்றான்: (நபியே!) ‘நிச்சயமாக! (உண்மையான) நஷ்டவாளிகள் யாரெனில், மறுமை நாளில் தமக்கும் தமது குடும்பத்தாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திக்கொண்டவர்கள் தாம். அதுவே மிகத் தெளிவான நஷ்டமாகும். (அஸ்ஸுமர்: 15)

அன்பின் வாசகர்களே! இந்த மேலான வசனத்தில் அல்லாஹுதஆலா மறுமை நாளில் ஏற்படக்கூடிய நஷ்டத்தைப் பற்றித் தெளிவுபடுத்தியுள்ளான். மறுமை நாளில் ஏற்படக்கூடிய நஷ்டமானது மிக மகத்தானதும் மிகப் பெரிய நஷ்டமுமாகும்.

மக்களிடம் சென்று ‘நஷ்டவாளிகள் யார்?’ என்று கேட்டால் அவர்கள் பணத்தை இழந்தவர்கள் தாம் நஷ்டவாளிகள் எனக்கூறுவர். அல்லது வீடு, வாசல்களை இழந்தவர்கள் நஷ்டவாளிகள் எனக்கூறுவர். அல்லது குடும்பத்தை இழந்தவர்கள் நஷ்டவாளிகள் எனக்கூறுவர். அல்லது பதவி, அந்தஸ்தை இழந்தவர்கள் நஷ்டவாளிகள் எனக்கூறுவர். மனிதர்களுடைய பார்வையில் இவர்களே நஷ்டவாளிகளாகக் கருதப்படுகிறார்கள்.

ஆனால், இஸ்லாத்தின் பார்வையில் இவர்கள் நஷ்டவாளிகள் அல்லர். மாறாக, உண்மையான நஷ்டவாளிகள் யாரென்பதைப் பற்றி அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கூறியிருக்கின்றனர்.

மிக மகத்தான, மிகக் கடுமையான நஷ்டம் மறுமை நாளில் ஏற்படக்கூடிய நஷ்டமே ஆகும். இந்நஷ்டம் உலகில் ஏற்படக்கூடிய எந்த நஷ்டத்திற்கும் ஈடாகாது. இந்நஷ்டம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் கைசேதப்படுவதும் மனிதர்களுக்கு எவ்விதப் பயனையும் ஈட்டித்தராது. உலகில் பல இலாபங்களை எதிர்கொண்டவர்கள் மறுமையில் மகத்தான நஷ்டங்களை சந்திக்க நேரிடலாம்.

மறுமை நாளில் ஏற்படக்கூடிய நஷ்டத்தை நபிமார்களும் அஞ்சியுள்ளார்கள். ஏனெனில், மறுமை நாளில் ஏற்படக்கூடிய நஷ்டம் மிகவும் மகத்தானது என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடைய மனைவியரும் அல்லாஹ் தடை செய்த கனியைப் புசித்தபோது தமது செயலை எண்ணி, கவலை கொண்டவர்களாக அல்லாஹ்விடத்தில் மன்றாடினார்கள். அல்லாஹ்வுடைய மன்னிப்பை பெறாவிட்டால் மறுமை நாளில் தாம் நஷ்டவாளிகளாக ஆகிவிடுவோம் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.

அல்லாஹுதஆலா கூறுகின்றான்: அவர்களிருவரும் ‘எமது இரட்சகனே! எமக்கு நாமே அநியாயம் செய்து கொண்டோம். நீ எங்களை மன்னிக்காவிட்டால், எமக்கு கருணை செலுத்தாவிட்டால் நிச்சயமாக நாம் நஷ்டவாளிகளில் உள்ளவர்களாக ஆகிவிடுவோம்” என்று கூறினர். (அல்அஃராப்: 23)

அதுபோன்று நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது மகனை வெள்ளப்பெருக்கிலிருந்து காப்பாற்றுமாறு அல்லாஹ்விடத்தில் பிரார்த்தித்தபோது அல்லாஹ் ‘அவன் ஒரு இணைவைப்பாளன், அவன் உம்மைச் சார்ந்தவனல்ல” என்று பதிலளித்தான். தான் தவறு செய்துவிட்டதாக உணர்ந்த நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உடனே அல்லாஹ்விடத்தில் மன்றாடினார்கள். தனக்கு அல்லாஹ்வின் பாவமன்னிப்புக் கிடைக்காவிட்டால் மறுமை நாளின் நஷ்டவாளிகளில் ஒருவனாக தான் மாறிவிடுவேன் என்பதை அவர்கள் அஞ்சி, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினார்கள்.

அல்லாஹுதஆலா கூறுகின்றான்: நூஹ் அவர்கள் ‘என்னுடைய இரட்சகனே! எது விடயத்தில் எனக்கு அறிவில்லையோ, அதைப்பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடத்தில் நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னிக்காவிட்டால், எனக்கு கருணை செலுத்தாவிட்டால் நான் நஷ்டவாளிகளில் ஒருவனாக மாறிவிடுவேன்” என்று கூறினார்கள். (ஹூத்: 47)

நபிமார்கள் எவ்வாறு மறுமை நாளின் நஷ்டத்தைப் பயந்தார்களோ,அது விடயமாக எச்சரிக்கையாக இருந்தார்களோ அதுபோன்று நாமும் இந்நஷ்டத்தை அஞ்சி, மறுமை நாளின் நஷ்டவாளிகளில் நாமும் ஆகிவிடாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மறுமை நாளின் மகத்தான நஷ்டத்திலிருந்து நாம் பாதுகாப்புப் பெறவேண்டுமென்றால் அந்த நாளின் நஷ்டவாளிகளுக்குரிய பண்புகளைத் தவிர்த்துக்கொள்வது எம்மீது கடமையாகும். மறுமை நாளின் நஷ்டவாளிகள் யாரென்பதை நாம் அறிந்து கொண்டால் அவர்களிலிருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

மறுமை நாளின் நஷ்டவாளிகளில் எட்டு சாராரைப் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மறுமை நாளில் நஷ்டவாளிகளாக மாறுவார்கள் என்பது அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் அறிவுப்புச் செய்தவையாகும்.

1.வியாபாரத்தின் காரணமாக அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதை மறந்தவர்கள்

அல்லாஹுதஆலா கூறுகின்றான்: ஈமான் கொண்டவர்களே! உங்களுடைய செல்வங்களும் பிள்ளைகளும் அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதை விட்டும் உங்களை வீணாக்கி விடக்கூடாது. இவ்வாறு செய்பவர்கள் நஷ்டவாளிகளே. (அல்முனாபிகூன்: 09)

எமது சொத்து செல்வங்கள், எமது வியாபாரங்கள், எமது தொழில்கள் யாவும் அல்லாஹ்வை விட்டும் அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை விட்டும் எம்மை மறக்கடிக்கச் செய்யக்கூடாது என அல்லாஹ் இவ்வசனத்தில் ஏவியிருக்கின்றான்.

சில மனிதர்கள் அல்லாஹ்வை மறந்து, அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் சரிவர நிறைவேற்றாமல் அதிக இலாபங்களை எதிர்பார்த்து அவர்களுடைய வியாபாரங்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருப்பதை நாம் காணலாம். தொழுகைக்கு அவர்களுக்கு நேரமில்லை. அல்லாஹ்வை திக்ர் செய்ய அவர்களுக்கு நேரமில்லை. அல்குர்ஆனைத் திறந்து ஓதுவதற்கு அவர்களுக்கு நேரமில்லை. மார்க்க வகுப்புக்களில் பங்கெடுத்து, மார்க்கத்தைக் கற்றுக்கொள்ள அவர்களுக்கு நேரமிருப்பதில்லை.

இவ்வாறு அல்லாஹ்வின் உரிமைகளை மறந்து,  தமது உலகத் தேவையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்பவர்கள் மிகப் பெரிய செல்வந்தர்களாக இருந்தாலும் அல்லது தொழிலதிபர்களாக இருந்தாலும் அல்லாஹ்வின் பார்வையில், இஸ்லாத்தின் பார்வையில் இவர்கள் மிகப் பெரும் நஷ்டவாளிகள் என்பதை மேற்குறிப்பிடப்பட்ட வசனம் உணர்த்துகின்றது.

எனவே,  இந்நஷ்டத்திலிருந்து எம்மைக் காப்பாற்றிக்கொள்ள எமது வியாபாரங்கள் அல்லாஹ்வின் ஞாபகத்தை விட்டும் திசை திருப்பிவிடாமல் நாம் எச்சரிக்கையாக செயற்பட வேண்டும். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கியுள்ளான். தொழில் செய்து சம்பாதிப்பதை அனுமதித்திருக்கின்றான். ஆனாலும், அல்லாஹ்வை மறந்து, அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை மறந்து வாழும் வாழ்க்கையை அல்லாஹ் வெறுக்கின்றான். அவர்களை அல்லாஹ் மறுமையில் நஷ்டவாளிகளாக மாற்றிவிடுவான்.

2.தொழுகையில் அலட்சியம் செய்பவர்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக மறுமை நாளில் ஓர் அடியானிடம் அவனது செயல்களில் முதலாவதாக விசாரிக்கப்படுவது அவனது தொழுகையைப் பற்றியாகும். அது சீராகிவிட்டால் அவன் வெற்றியடைவான். அது கெட்டுவிட்டால் அவன் தோல்வியையும் நஷ்டத்தையும் அடைந்துகொள்வான். (திர்மிதீ)

எந்த மனிதனின் தொழுகை சீராகவில்லையோ அவன் மறுமையில் மிகப் பெரும் நஷ்டத்தை சந்திப்பான் என்பது நபிகளாரின் உண்மை வாக்காகும்.

தொழாதவர்கள், தொழுகை விடயத்தில் அலட்சியமாக இருப்பவர்கள், தொழுகையைப் புறக்கணிப்பவர்கள், தொழுகையை சரியாக நிறைவேற்றாதவர்கள், பிறருக்காக தொழக்கூடியவர்கள் யாவருமே அந்த மகத்தான நாளின் மிகப் பெரிய நஷ்டத்தை சுமந்துகொள்வார்கள்.

இந்த நஷ்டத்திலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வதாயின் எமது தொழுகைகள் சீராக்கப்பட வேண்டும். அவற்றில் உள்ள குறைபாடுகள் திருத்தப்பட வேண்டும். அவைகள் நபிகளாரின் வழிகாட்டலின்படி சரியான அமைப்பில் நிறைவேற்றப்பட வேண்டும்.

3.காபிர்களைப் பின்பற்றுபவர்கள்

அல்லாஹுதஆலா கூறுகின்றான்: ஈமான் கொண்டவர்களே! நிராகரித்தோரை நீங்கள் பின்பற்றினால் உங்களை உங்களுடைய ஈமானிலிருந்து அவர்கள் திருப்பிவிடுவார்கள். அதன் காரணமாக நஷ்டவாளிகளாக நீங்கள் மாறிவிடுவீர்கள். (ஆலுஇம்ரான்: 149)

அல்லாஹ்வின் எதிரிகளாகிய காபிர்களை இறை நம்பிக்கையாளர்கள் பின்பற்றக்கூடாது என அல்லாஹ் தடை செய்கிறான். அவ்வாறு அவர்களைப் பின்பற்றி நடப்பது மனிதனுக்கு மறுமையில் நஷ்டத்தை உண்டாக்கும் என்றும் அல்லாஹ் எச்சரிக்கையிட்டுள்ளான்.

எனவே, காபிர்களைப் பின்பற்றும் முஸ்லிம்கள்,  இஸ்லாமிய வழிமுறைகளை ஒதுக்கிவிட்டு காபிர்களின் வழிமுறைகளைப் பின்பற்றுபவர்கள், காபிர்களைப் போன்று ஆடை, அலங்கார நடவடிக்கைகளை மேற்கொள்வபவர்கள், காபிர்களைப் போன்று கழுத்தில் மாலையும் கைகளில் காப்புக்களையும் அணியக்கூடிய ஆண்கள், இஸ்லாமிய சிந்தனைகளை விட்டுவிட்டு காபிர்களின் சிந்தனைகளுக்கு முன்னுரிமை வழங்குபவர்கள் யாவருமே அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கையை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளட்டும். அல்லாஹ்வின் வாக்குப்படி இவர்கள் மறுமை நாளில் பெரும் நஷ்டவாளிகள் என்பதில் சந்தேகமில்லை.

4.மக்களுக்கு அநியாயம் செய்பவர்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘நஷ்டவாளி யார் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று தனது தோழர்களிடம் கேட்டார்கள். அதற்கு அவர்கள் ‘திர்ஹங்களும் சொத்துக்களும் இல்லாதவரே நஷ்டவாளி” என பதிலளித்தார்கள். பின்பு நபியவர்கள் ‘நிச்சயமாக எனது உம்மத்தின் நஷ்டவாளி மறுமை நாளில் தொழுகையுடனும் நோன்புடனும் ஸகாத்துடனும் வருவான். ஆனால், அவன் இன்னாருக்கு ஏசியிருப்பான். இன்னாரைப் பற்றி அவதூறு சொல்லியிருப்பான். இன்னாருடைய பணத்தை சூறையாடிருப்பான். இன்னாருடைய இரத்தத்தை சிந்தியிருப்பான். இன்னாருக்கு அடித்திருப்பான். அவனால் அநீதி இழைக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவனது நன்மைகளிலிருந்து வழங்கப்படும். அவனுக்குத் தீர்ப்பு வழங்கப்பட முன்பே அவனது நன்மைகள் யாவும் தீர்ந்து விட்டால், அவனால் அநியாயம் இழைக்கப்பட்டவர்களின் பாவங்களிலிருந்து எடுக்கப்பட்டு இவன் மீது போடப்படும். பின்பு அவன் நரகத்தில் வீசப்படுவான். (முஸ்லிம்)

அநியாயம் என்பது சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அது மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்டதாகும். மேலும்,  அது மனிதனை நஷ்டத்தின் பால் கொண்டு செல்லும்.

மக்களுக்கு அநியாயம் செய்வோர்,  பெற்றோருக்கு அநியாயம் செய்வோர், உறவினர்களுக்கு அநியாயம் செய்வோர், நண்பர்களுக்கு அநியாயம் செய்வோர், பொதுமக்களுக்கு அநியாயம் செய்வோர், பொறுப்புதாரிகளுக்கு அநியாயம் செய்வோர், பணியாட்களுக்கும் வேலையாட்களுக்கும் அநியாயம் செய்வோர் இந்த மறுமை நாளின் நஷ்டத்தை அஞ்சிக்கொள்ளட்டும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்!