பள்ளிவாசல்களுக்காக எம் உயிர்கள் அர்ப்பணமாகட்டும்! – 01

بسم الله الرحمن الرحيم

தற்போது நாம் பள்ளிவாசல்கள் இறைவிரோதிகளினால் தாக்கப்படுகின்ற காலகட்டத்தில் வாழ்கிறோம். பள்ளிசால்களைப் பொறுத்தளவில் அவை முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக விளங்குகின்றன. அவற்றுக்கென்று தனியான ஒரு கௌரவம் உள்ளது. அதனைப் பேணிப்பாதுகாப்பது முஸ்லிம்களாகிய எம்மீதுள்ள பாரிய பொறுப்பாகும். இதனால் தான் நபியவர்கள் தனது ஹிஜ்ரத்தின் போது முதலாவது நிர்மாணித்த கட்டமாக பள்ளிவாசல் காணப்படுகின்றது. இன்னும், எமது நாகரீகம் ஊற்றெடுத்த இடம் பள்ளிவாசல் என்பதையும் யாம் அறிவோம்.

இமாம் இப்னு தைமியா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “இமாம்களின் முக்கிய இடங்களாகவும், இந்த உம்மத்தினர் ஒன்று சேரக்கூடிய இடங்களாகவும் பள்ளிவாசல்கள் திகழ்கின்றன. நபியவர்கள் தனது பள்ளிவாசலை தக்வாவின் மீது நிறுவினார்கள். அதிலே தொழுகை, அல்குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், அமீர்களை நியமித்தல், பிரமுகர்களை வரவேற்றல், முஸ்லிம்களை அவர்களுடைய உலக மற்றும் மார்க்க விடயங்களுக்காக தன்னிடத்தில் ஒன்று சேர்த்தல் போன்ற காணப்பட்டன”. (மஜ்மூஉல் பதாவா)

பள்ளிவாசல்கள் முஸ்லிம் சமுகத்திற்கு வழங்குகின்ற பணிகளை நல்ல முறையில் அவதானித்த கீழைத்தேய வாதிகள் அவற்றை விட்டும் முஸ்லிம்களை தூரமாக்கக்கூடிய காரியங்களில் முனைப்புடன் செயல்படுகின்றார்கள். கீழைத்தேய வாதிகளில் ஒருவனான ஸஹீர் என்பவன் கூறும் போது: “இன்று வரை முஸ்லிம்கள் பலமான சமுகமாக இருப்பதற்குக் காரணம் அவர்களுடன் அல்குர்ஆனும் பள்ளிவாசலும் இருப்பதுவாகும்” என்கிறான்.

எம்முன்னோர்களை அவதானிக்கையில் அவர்களுடைய காலங்களில் பள்ளிவாசல்கள் பிரதான இடத்தை வகித்தன. படைகள் அனுப்பப்படக்கூடிய இஸ்தலங்களாகவும், கஷ்டங்கள் மற்றும் துயரங்களின் போது கைகொடுக்கப்படக்கூடிய இடங்களாகவும், நேர்வழியின் ஒளிச்சுடர் வீசக்கூடிய கோபுரங்களாகவும், தலைசிறந்த சமுகத் தலைவர்கள் வளர்த்தெடுக்கப்பட்ட பயிற்சிப் பாசறைகளாகவும் அவர்களது காலப் பள்ளிவாசல்கள் காணப்பட்டன.

பள்ளிவாசல்களைப் பொறுத்தளவில் அவை நிரம்ப பிரயோசனங்களும் நலவுகளும் காணப்படுகின்றன. ஹஸனுல் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “இறை விசுவாசியே! பள்ளிவாசலானது ஐந்தில் ஒரு பிரயோசனத்தை உனக்கு அளித்தே தீரும். ஒன்றில் அது உன் முன் சென்ற பாவங்களுக்கு அல்லாஹ்வின் புறத்தில் இருந்து மன்னிப்பைத் தேடித்தரும். அல்லது, அல்லாஹ்வுக்காக நேசம் கொள்ளக்கூடிய ஒரு நல்லடியாரை ஏற்படுத்தித் தரும். அல்லது, உன்னுடைய அண்டை வீட்டாரின் நிலை குறித்து  அறிந்து கொள்வதற்கும், அவர்களில் நோயுற்றவர்கள் மற்றும், ஏழ்மை பீடித்தவர்கள் போன்றோரைத் தெரிந்து கொள்வதற்கும் வழிவகுக்கும். அல்லது, ஹராத்தை விட்டும் உன்னுடைய செவிப்புலனையும் கற்புலனையும் பாதுகாத்துக் கொள்ள உதவும். அல்லது, உனக்கு நேர்வழியைக் காட்டித்தருகின்ற ஒரு வசனத்தை செவியேற்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித்தரும்”.

மேலும், பள்ளிவாசலானது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய இடமாகும். நபியவர்கள் கூறினார்கள்: “பிரதேசங்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் உகப்பானது பள்ளிவாசல்கள் அமையப்பெற்ற இடங்களாகும்”. (முஸ்லிம்)

இன்னும், பள்ளிவாசலானது இறையச்சமுள்ள ஒரு விசுவாசியின் வீடாகவும் உள்ளது. ஸல்மானுல் பாரிஸி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அபூத்தர்தா ரழியல்லாஹு அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்: “என்னுடைய சகோதரனே! பள்ளிவாசல் உன்னுடைய வீடாக இருக்கட்டும்! ஏனெனில், நபியவர்கள் கூறக் கேட்டுள்ளேன்: பள்ளிவாசல் ஒவ்வொரு இறையச்சமுள்ள அடியானதும் வீடாகும். எவரது இராத்தரிக்கும் இடமாக பள்ளிவாசல் இருக்கின்றதோ, அவரின் உயிருக்கும், அருளுக்கும், மறுமையில் பாலத்தைக் கடப்பதற்கும் அல்லாஹ் பொறுப்புதாரியாகவுள்ளான்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். (பஸ்ஸார், தபராணி)

மேலும், பள்ளிவாசலில் தான் உள அமைதியும் இறையருளும் இருக்கின்றன. நபியவர்கள் கூறினார்கள்: “ஒரு கூட்டம் அல்லாஹ்வின் மாளிகைகளில் ஒரு மாளிகையில் ஒன்றிணைந்து, தங்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக் கொண்டும், அதனை ஒருவருக் கொருவர் கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருப்பார்களென்றால், அவர்களுக்கு மத்தியில் அமைதி இறங்கும். மேலும், அவர்களை அருள் மூடிக் கொள்ளும். இன்னும், மலக்குகள் அவர்களை சூழ்ந்து கொள்வார்கள். அல்லாஹ் தன்னிடமுள்ளவர்களிடத்தில் அவர்களைப் பற்றி புகழ்ந்து பேசுவான்”. (முஸ்லிம்)

பள்ளிவாசல்களின் சிறப்பை உணர்த்தும் மற்றுமொரு விடயம் அவற்றை நிர்மாணிக்குமாறு மார்க்கம் எம்மைத் தூண்டியுள்ளமையாகும். அவ்வாறு நிர்மாணிப்பவர்களுக்கு அது ஒரு சிறிய அளவிலான பள்ளிவாசலாக இருந்தாலும் அதற்குப் பிறதியாக சுவனத்தில் ஒரு மாளிகை கட்டப்படுவதாக நபியவர்கள் வாக்களித்துள்ளார்கள்.

மேலும், பள்ளிவாசல்களை வெறுமனே நிர்மாணிக்குமாறு பணித்துவிட்டு அவற்றினுடைய விடயத்தில் மார்க்கம் மௌனிக்கவில்லை. மாற்றமாக, அவற்றை நிர்வகிப்பதற்குப் பாத்திரமானவர்களையும் இனங்காட்டியுள்ளது என்ற விடயம் பள்ளிவாசல்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்திக் காட்டுகின்றது.

இன்னும், பள்ளிவாசல்களாகின்றன ஓர் அடியானையும் அல்லாஹ்வையும் ஒன்றிணைக்கக்கூடிய இடமாகவும் உள்ளன. இத்தகைய சந்திப்பிற்குக் காரணமாக அமையக்கூடிய ஸுஜூதை ஓர் அடியான் மரணித்த போதும் நேசிக்கக்கூடியவனாக இருப்பான். ஒரு முறை நபியவர்கள் தன் தோழர்களை நோக்கி இந்த கப்ருக்குச் சொந்தக்காரர் யார்? எனக் கேட்டார்கள். அதற்கு தோழர்கள்: இப்பெயரையுடைய நபர் தான் என பதிலளித்தார்கள். அப்போது நபியவர்கள்: “இரு ரக்அத்கள் உங்களது உலகில் எஞ்சியிருப்பதை விட இவருக்கு மிக விருப்பமானதாக இருக்கும்” என்றார்கள். (தபராணி)

அத்தோடு, பள்ளிவாசல்களின் மகிமையை எடுத்துக்காட்டக்கூடிய மற்றுமொரு விடயம்தான் அவற்றை அல்லாஹ் தன்னுடைய வீடாக அறிமுகப்படுத்தியுள்ளமையாகும். இமாம் கதாதா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹுத்தஆலா பூமியில் பள்ளிவாசல்கள் அமையப்பெற்றிருக்கும் இடங்களை தனக்குரியதாகத் தேர்ந்தெடுத்துள்ளான்”. (தப்ஸீர் இப்னு கஸீர்)

எமது மார்க்கம் இத்தகைய சிறப்புகளைப் பெற்ற பள்ளிவாசல்களின் கண்ணியத்தைப் பேணிப்பாதுகாக்குமாறு எம்மைப் பணித்துள்ளது. எந்த அளவுக்கென்றால், ஒருவர் பள்ளிவாசலில் அல்குர்ஆனை சத்தமிட்டு ஓதுவது அங்கு வீற்றிருக்கும் ஏனையவர்களுக்கு இடையூறாக இருக்கும் போது அதனைக் கூட தவிர்க்குமாறு மார்க்கம் எமக்கு கட்டளையிட்டுள்ளது. அதேபோன்று, மார்க்கம் எமக்கு ஹலாலாக்கிய வியாபார நடவடிக்கைகள், பூண்டு வெங்காயம் போன்றவற்றை சாப்பிடுதல் ஆகிய காரியங்களைக் கூட பள்ளிவாசல்களின் மகத்துவம் கருதி எமக்குத் தடைசெய்துள்ளது. இது விடயம் குறித்து சில உலமாக்கள் 15 ஒழுக்க விழுமியங்களை தொகுத்தளித்துள்ளார்கள். (பார்க்க: தப்ஸீர் குர்துபி)

அதேபோன்று, பள்ளிவாசல்களின் சுத்தத்தைப் போணுவதின் மூலமும் மார்க்கம் அவற்றின் கண்ணியத்தைப் பாதுகாத்துள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டே நபியவர்களின் காலத்தில் பள்ளிவாசலை சுத்தம் செய்வதற்காக ஒரு கருப்பு நிறப்பெண் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை நாம் அறிவோம் (புகாரி, முஸ்லிம்). மேலும், பள்ளிவாசலில் துப்பக்கூடியவர்கள் அதனை மண்ணால் மூடி விடுவது அதற்குரிய பரிகாரமாகும் (புகாரி, முஸ்லிம்) என்ற செய்தியையும் நாம் தெரிந்து வைத்துள்ளோம்.

–    இன்ஷா அல்லாஹ் தொடரும்

–    அபூ ஹுனைப்