பள்ளிவாசல்களுக்காக எம் உயிர்கள் அர்ப்பணமாகட்டும்! – 02

بسم الله الرحمن الرحيم

உயிர், உடைமைகள், மற்றும் பள்ளிவாசல்கள் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக உயிரைத் தியாகம் செய்வது அல்லாஹ்வின் பாதையில் உயிர்த்தியாகம் செய்வதைப் போன்றாகும்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்: “யார் தனது செல்வத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடி மரணத்தைத் தழுவுகிறாரோ அவர் ஷஹீத் ஆவார். மேலும், யார் தனது மார்க்கத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடி மரணத்தைத் தழுவுகிறாரோ அவரும் ஷஹீத் ஆவார். இன்னும், யார் தனது உயிரைப் பாதுகாப்பதற்காகப் போராடி மரணத்தைத் தழுவுகிறாரோ அவரும் ஷஹீத் ஆவார். மற்றும், எவர் தனது குடும்பத்தைப் பாதுகாப்பதற்காகப் போராடி மரணத்தைத் தழுவுகிறாரோ அவரும் ஷஹீத் ஆவார்”. (திர்மிதி)

நபியவர்களிடத்தில் ஒரு மனிதர் சமுகம் தந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் என் செல்வத்தை எடுக்க நாடி என்னிடம் வந்தால் அவர் விடயத்தில் நான் என்ன செய்ய வேண்டும்? எனக் கருதுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு நபியவர்கள்: உன் செல்வத்தை அவருக்கு கொடுக்காதே! எனக் கூறினார்கள். அப்போது அம்மனிதர்: அப்படியென்றால் அவர் என்னுடன் போர் புரிய முற்பட்டால்! நான் என்ன செய்வது? எனக்கேட்க, நீயும் அவருடன் போராடு! எனப் பகர்ந்தார்கள். அப்போது அவர் என்னைக் கொன்றுவிட்டால் என் நிலை என்ன? என அம்மனிதன் வினவ, நீ ஷஹீதாகக் கருதப்படுவாய் என நபியவர்கள் பதிலளித்தார்கள். அதற்கு அம்மனிதர்: நான் அவரைக் கொன்றுவிட்டால்? எனக் கேட்க, அவர் நரகத்தில் இருப்பார் என நபியவர்கள் பதில் கூறினார்கள்’. (முஸ்லிம்)

இத்தகைய அந்தஸ்தே பள்ளிவாசல்களைப் பாதுகாப்பதற்காகப் போராடுவர்களுக்கும் உள்ளது. இப்பெரும் பணியை மேற்கொள்பவர்களின் சிறப்பு குறித்து நபியவர்கள் பல செய்திகளைக் கூறியுள்ளார்கள். அந்தவிதத்தில், அல்லாஹ்வின் பாதையில் கண்விழித்து பாதுகாப்பு நடவடிக்கையில் ;ஈடுபடுவோரின் கண்கள் குறித்து நபியவர்கள் கூறும் போது: “இரு கண்கள் உள்ளன, அவற்றை நரகம் தீண்டாது! ஒன்று, அல்லாஹ்வின் அச்சத்தினால் அழுத கண். மற்றையது, அல்லாஹ்வின் பாதையில் இராப்பொழுதில் கண்விழித்த கண்ணாகும் என்றார்கள்”. (பைஹகீ)

அல்லாஹ்வின் வீட்டிற்காகத் தங்கள் உயிர்களை அர்பணிக்கக் கூடியவர்கள் மறுமை நாளில் அல்லாஹ்வுக்கருகாமையில் இருப்பார்கள் என்ற நன்மாறாயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

நபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அல்லாஹ் மறுமைநாளில் என்னுடைய அண்டைவீட்டார் எங்கே? என இரு முறை கூவி அழைப்பான். அப்போது மலக்குகள்: எங்கள் இரட்சகனே! உனக்கருகாமையில் இருக்க யாருக்கு தேவையுள்ளது? எனக் கேட்க, எங்கே பள்ளிவாசல்களை நிர்வகிக்கக்கூடியவர்கள்? எனக் கேட்பான்”. (அஸ்ஸஹீஹா)

இங்கு பள்ளிவாசல்களை நிர்வகிக்கக்கூடியவர்கள் என்போர் அவற்றின் கண்ணியத்தை நல்ல முறையில் பேணிப்பாதுகாத்து நடப்போராவர். இத்தகையவர்களின் பட்டியலில் நிச்சயமாக பள்ளிவாசல்களுக்காகப் போரிடுவோரும் உள்ளடங்குவார்கள் என்பதில் ஐயமில்லை!

எனவே, அன்பார்ந்த வாசகர் நேஞ்சங்களே! இறையில்லங்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்ற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பள்ளிவாசல்கள் தாக்கப்படுகின்ற போது அவற்றைப் பாதுகாக்கக் கூடிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளாமல் இருக்கக்கூடாது. அப்போதே களமிறங்கி எங்கள் உயிர்களைப் பழிகொடுத்தாவது அவற்றுக்காக போராடக்கூடிய மக்களாக நாம் மாற வேண்டும். இத்தகைய பக்குவத்தை அல்லாஹ் எம்மனைவருக்கும் தந்தருள்வானாக!

والحمد لله رب العالمين

–    அபூ ஹுனைப்