மஃமூம்கள் சத்தமிட்டு தக்பீர் சொல்லலாமா?

بسم الله الرحمن الرحيم

பெருநாள் தொழுகை, ஜனாஸாத் தொழுகை போன்ற பல தக்பீர்களை உடைய தொழுகைகளில் இமாமைப் பின்பற்றித் தொழும் மஃமூம்களில் பலர் இமாமைப் போன்று சத்தமிட்டு தக்பீர் சொல்வது பல பிரதேசங்களில் நடைமுறையில் உள்ளது. இதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையில் ஆதாரம் உண்டா? என்பதை தெளிவுபடுத்துவதே இத்தொகுப்பின் நோக்கமாகும்.

மஃமூம்கள் சத்தமாக தக்பீர் சொல்வதற்கு ஆதாரமாக எந்த ஹதீஸும் இடம்பெறவில்லை. அதன் காரணமாக, இஸ்லாமிய அறிஞர்கள் பலரும் இவ்விடயம் பிழையானது என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். தக்பீரை சத்தமிட்டுச் சொல்வது இமாமுக்கும், மஃமூம்களுக்கு இமாமின் சத்தம் கேட்காத சமயத்தில் இமாமுடைய தக்பீரை எத்திவைப்பவருக்கும் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடாத்தினார்கள். அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களுக்குப் பின்னால் நின்றார்கள். நபியவர்கள் தக்பீர் கூறும்போது (அந்த தக்பீரை எமக்கு செவிமடுக்க முடியாததால்) எங்களுக்கு அதைச் செவியேற்க அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தக்பீர் கூறினார்கள். (முஸ்லிம்: 413)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோயுற்ற காலத்தில் தொழுவித்த ஒரு தொழுகையைப் பற்றியே இங்கு ஜாபிர் ரழியல்லஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள். நோயின் காரணமாக நபியவர்களின் சத்தம் தொழுகையாளிகளுக்கு கேட்க முடியாதவாறு இலகுவான சத்தமாகவே இருந்தது. எனவேதான், அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபியவர்களின் தக்பீரை மக்களுக்கு எத்திவைத்தார்கள்.

மஃமூம்கள் சத்தமாக தக்பீர் சொல்வதற்கு அனுமதியிருப்பின் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தக்பீரை எத்திவைப்பதற்கு ஒரு தேவை ஏற்பட்டிருக்காது. ஆகவே, நபியவர்களுக்குப் பின்னால் தொழுத ஏனைய நபித்தோழர்கள் எவருமே சத்தமாக தக்பீர் சொல்லவில்லை என்பது தெளிவாகிறது.

மேலும், மஃமூம்கள் தக்பீரை சத்தமாகச் சொல்வது ஏனைய தொழுகையாளிகளுக்குத் தொந்தரவாகக்கூட அமையலாம்.

அப்துல்லாஹ் இப்னு ஜாபிர் அல்பயாளீ என்ற நபித்தோழர் கூறுகின்றார்: மக்கள் தொழுதுகொண்டிருக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தார்கள். அப்போது தொழக்கூடியவர்களின் ஓதும் சத்தம் மேலோங்கியிருந்தது. அதைப் பார்த்த நபியவர்கள் ‘தொழுகையாளி தனது இரட்சகனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறார். அவர் எதைப் பற்றி உரையாடுகிறார் என்பதை அவர் கவனித்துக்கொள்ளட்டும். உங்களில் சிலர் சிலரை விட சத்தமிட்டு ஓத வேண்டாம்.’ எனக்கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்: 4/344)

தொழுகையாளிகளுக்கு குர்ஆனைக் கொண்டும் தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதை நபியவர்கள் இங்கு கற்றுத்தருகிறார்கள். அதுபோன்றே மஃமூம்கள் சத்தமாகத் தக்பீர் சொல்வது ஏனையோருக்குத் தொந்தரவாக அமைகின்றது. எனவே, இவ்வாறு அவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவது நபியவர்கள் கண்டித்த ஒரு செயல் என்பதை நாம் புரிந்து கொண்டோம்.

சிலவேளை இவ்வாறு மஃமூம்கள் தக்பீரை சத்தமிட்டுச் சொல்வது ஏனைய மனிதர்களின் தொழுகையில் தவறு ஏற்படுவதற்கும் வாய்ப்பாக அமைகின்றது. உதாரணமாக: ஒரு மனிதர் பிந்தியவராக தொழுகையில் சேர்ந்து கொள்கின்றார். அப்போது மஃமூம்கள் ஸுஜுதில் உள்ளனர். இவர் சத்தமாகத் தக்பீர் கூறி ஸுஜூதுக்கு செல்வாராயின், மஃமூம்கள் தக்பீர் கூறியவர் இமாம் எனக்கருதி ஸுஜூதிலிருந்து தலையை உயர்த்திவிடுவார்கள். சத்தமாகத் தக்பீர் சொன்னதால் இவ்வாறான ஒரு தவறு தொழுகையில் உண்டாகக்கூடும்.

அல்புஹூதி அல்ஹன்பலீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எந்தவொரு தொழுகையுடைய வார்த்தையையும் சத்தமிட்டுச் சொல்வது வெறுக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அது ஏனைய தொழுகையாளிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தலாம். (கஷ்ஷாபுல் கன்னாஃ: 1/332)

மஃமூம்கள் தக்பீரை சத்தமிட்டுச் சொல்வது இமாம்களின் ஏகோபித்த கருத்தின்படி தடுக்கப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய செய்தியாகும். இப்னு தைமியா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: இமாம்களின் ஏகோபித்த கருத்தின்படி தேவையின்றி இமாமுக்குப் பின்னால் சத்தமாகத் தக்பீர் சொல்வது அனுமதிக்கப்படதன்று. (மஜ்மூஉல் பதாவா: 23/402)

இமாம் நவவீ கூறுகின்றார்: இமாம் அல்லாதவர்களாகிய மஃமூம்கள் மற்றும் தனித்துத் தொழுபவர்கள் தக்பீரை இரகசியமாகச் சொல்வதே நபிவழியாகும். (அல்மஜ்மூஃ: 3/295)

இப்னு உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: மஃமூமைப் பொறுத்தவரையில் தக்பீர், துஆஉல் இஸ்திப்தாஹ் (தக்பீர் கட்டிய பின் ஓதும் துஆ) ஸுஜூதில் துஆச் செய்வது, தஸ்பீஹ் செய்வது போன்றவற்றை இரகசியமாகக் கூறுவதே அவரது கடமையாகும். அவருடைய சத்தத்தை உயர்த்துவது கூடாது. ஏனெனில், அவர் சத்தத்தை உயர்த்துவது இமாமைப் பின்தொடர்கின்ற விடயத்தைச் சீர்குழையச் செய்யும். மேலும், அவர் சத்தத்தை உயர்த்துவது தம்மைச் சூழ இருப்பவர்களுக்கும் இடைஞ்சலாகும். (பதாவா ‘நூருன் அலத்தர்ப்: ஒலிப்பதிவு நாடா இலக்கம் 286)