‘லைலதுல் கத்ர்’ ஓர் ஆய்வு – 02

بسم الله الرحمن الرحيم

லைலதுல் கத்ர் இரவின் அடையாளங்கள்

1. அந்த இரவு குளிராகவோ, சூடாகவோ இருக்காது. மாறாக சாந்தமாகவும் அமைதியாகவும் காணப்படும்: நபியவர்கள் கூறியதாக ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அந்த இரவு இலகுவானதாகவும் ஒளிமயமானதாகவும் இன்னும் குளிரற்றதாகவும் சூடற்றதாகவும் காணப்படும்.” (இப்னு குஸைமா: 2190, இப்னு ஹிப்பான்: 3688)

இந்த ஹதீஸைப் பொறுத்தவரையில் பலவீனமானதாக இருந்த போதிலும் அதை உறுதிப்படுத்தும் முகமாக இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களின் வாயிலாக இப்னு குஸைமாவில் (2192) இன்னொரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. எனவே, இந்த ஹதீஸ் பலமுள்ள ஹதீஸாக மாறிவிடுகின்றது. (அஸ்ஸஹீஹா: 2190)

2. மழை பொழியும்: இதற்கு ஆதாரமாக அபூஸஈத் அல்குத்ரீ ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் வாயிலாக புஹாரீ, முஸ்லிம் போன்ற கிரந்தங்களில் ஒரு செய்தி பதிவாகியுள்ளது. நபியவர்கள் கூறுகின்றார்கள்: “நான் தண்ணீரிலும் களிமண்ணிலும் சுஜுது செய்பவனாகக் கனவில் கண்டேன்.”

3. அன்றைய நாள் காலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மங்கிய நிலையில் காணப்படும்: நபியவர்கள் கூறியதாக உபை இப்னு கஃப் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அன்றைய நாள் காலையில் சூரியன் அதன் ஒளிக்கதிர்கள் மங்கிய நிலையில் உதயமாகும்.” (முஸ்லிம்: 762)

அந்த இரவுகளில் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன?

அந்த இரவுகளை நாம் அதிகம் நின்று வணங்குவதிலும் துஆக் கேட்பதிலும் கழிப்பது நபிவழியாக இருக்கின்றது. நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “யார் லைலதுல் கத்ர் இரவில் ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்த வண்ணமும் நின்று வணங்குவாரோ அவருடைய முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” (புஹாரீ: 1901, முஸ்லிம்: 759)

ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நான் நபிகளாரிடத்தில் அல்லாஹ்வின் தூதரே! லைலதுல் கத்ர் இரவை நான் அடைந்துகொண்ட சமயத்தில் எதைக்கூற வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? எனக்கேட்டேன். அப்போது நபியவர்கள்

اللهم إنك عفو تحب العفو فاعف عني

என்ற துஆவைக் கூறுவாயாக எனக் கூறினார்கள்.” (அஹ்மத், ஸஹீஹ் இப்னு மாஜா: 3105, ஸஹீஹுத் திர்மிதீ: 2789)

எனவே, இந்த இரண்டு நபிமொழிகளிலிருந்தும் நபியவர்கள் நின்று வணங்குவதிலும் துஆக் கேட்பதிலும் கழித்துள்ளார்கள் என்பது தெளிவாகியுள்ளது. இதற்கு மாறாக இன்று ஒற்றைப்படை இரவுகளில் குறிப்பாக இருபத்தி ஏழாவது இரவன்று பல பித்அத்தான காரியங்கள் நடைபெறுவது மனதிற்கு கவலை தரும் ஒன்றாக உள்ளது. அந்த இரவுகளை இபாதத்களில் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கூட்டாக சத்தமிட்ட வண்ணம் குர்ஆன் ஓதுவது, அவ்றாதுகளைக் கூறுவது அத்தோடு தவ்பாவை ஒலிபெருக்கிகளில் கூட்டாக ஊர் முழுவதும் கேட்கும் அளவிற்கு பரவவிடுவது போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் பள்ளியில் லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், சுப்ஹானல்லாஹ் போன்ற அவ்றாதுகளை சத்தமிட்ட வண்ணம் செய்தவர்களை வன்மையாகக் கண்டித்தார்கள். அத்தோடு அம்ரு இப்னு ஸலமா என்ற ஸஹாபி கூறுகின்றார்: அன்றைய தினம் சத்தமிட்ட வண்ணம் அவ்றாதுகளைக் கூறியவர்களை நகர்வான் என்ற இடத்தில் கவாரிஜ்களுடன் இருப்பதைக் கண்டேன்.

(அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்ஸஹீஹா என்ற புத்தகத்தில் பதிவாகியுள்ளது.)

லைலதுல் கத்ருடைய சிறப்புக்கள்

1. இது குர்ஆன் இறங்கிய இரவாகும். அல்லாஹ் கூறுகின்றான்: “நாம் இந்தக் குர்ஆனை லைலதுல் கத்ர் என்ற இரவில் இறக்கிவைத்தோம்.” (அல்கத்ர்:1)

2. அல்லாஹ் அந்த இரவின் விவகாரங்களை கண்ணியப்படுத்தியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான்: “(நபியே!) லைலதுல் கத்ர் இரவு எது? என்பதை உமக்கு அறிவித்தது எது?” (அல்கத்ர்:2)

3. இவ்விரவு லைலதுல் கத்ர் இரவல்லாத ஏனைய ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும். அல்லாஹ் கூறுகின்றான்: “லைலதுல் கத்ர் இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்ததாகும்.” (அல்கத்ர்:3)

4. சங்கைமிக்க மலக்குமார்களும் ரூஹ் எனப்படும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் இவ்விரவில் இறங்குவார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: “மலாஇகாமார்களும் ரூஹ் என்ற ஜிப்ரீலும் அவ்விரவில் இறங்குவார்கள்.” (அல்கத்ர்:4)

5. ஈமானுடையவர்களுக்கு அவ்விரவு சாந்தியானதாக இருக்கும். அல்லாஹ் கூறுகின்றான்: “அதிகாலை உதயாமாகும் வரை இவ்விரவு சாந்தியானதாகும்.” (அல்கத்ர்:5)

லைலதுல் கத்ர் இரவு மறைக்கப்பட்டதற்கான நோக்கம்

இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்:

லைலதுல் கத்ர் இரவு மறைக்கப்பட்டதன் நோக்கம் என்னவென்றால் அந்த நாளை மக்கள் தேடிக்கொள்வதில் அதிகம் முயற்சி செய்வார்கள் என்பதாகும். அது குறிப்பிடப்பட்டிருப்பின் அந்த நாளில் மாத்திரம் அமலை சுருக்கிக் கொண்டிருப்பார்கள் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

லைலதுல் கத்ர் என்பது இந்த உம்மத்தினருக்கு மாத்திரம் குறிப்பாக்கப்பட்டதா?

இது விடயத்தில் இமாம் நவவீ அவர்கள் இந்த உம்மத்தினருக்கு மாத்திரம் குறிப்பாக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள். ஆனாலும், இது சம்பந்தமாக அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் வாயிலாக ஒரு ஹதீஸ் இடம்பெற்றுள்ளது. நபியவர்கள் கூறுகின்றார்கள்: “அல்லாஹுத்தஆலா இந்த உம்மத்தினருக்கு லைலதுல் கத்ர் இரவை அன்பளிப்பாக தந்துள்ளான். இதற்கு முன்னைய எந்த உம்மத்தினருக்கும் இது கொடுக்கப்படவில்லை.”  என்றாலும் அஷ்ஷெய்ஹ் அல்பானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய ளஈபுல் ஜாமிஃ என்ற புத்தகத்தில் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்று கூறுகின்றார்கள். எனவே, இந்த உம்மத்தினருக்கு மாத்திரம் குறிப்பாக்கப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

எனவே, அன்பார்ந்த வாசகர் நெஞ்சங்களே! லைலதுல் கத்ர் இரவு தொடர்பாக நாம் மேலே குறிப்பிட்ட அம்சங்களை நன்கு புரிந்து செயற்படுவோமாக!

–    தொகுப்பு: அஸ்ஹர் இப்னு அபீஹனீபா