மார்க்கப்பற்றுள்ள பெண்ணுக்கு முதலிடம் கொடுங்கள்!

بسم الله الرحمن الرحيم

சமூகத்தில் காணப்படும் அனைத்துத் தரப்பினருக்கும் திருமணம் செய்து வைக்குமாறு மார்க்கம் பணிக்கின்றது. இளைஞர் யுவதிகள், கணவனை இழந்த பெண்கள் மனைவியை இழந்த ஆண்கள், மற்றும் அடிமைகளில் உள்ள ஆண்கள் பெண்கள் என்று எவ்வித பாரபட்சமுமின்றி பொதுவான ஒரு கட்டளையாக மார்க்கம் எமக்கு இட்டுள்ளது.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “உங்களில் வாழ்க்கைத் துணையை இழந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் முடித்து வையுங்கள்! மேலும், உங்களது ஸாலிஹான ஆணடிமைகளுக்கும் பெண்ணடிமைகளுக்கும் திருமணம் முடித்து வையுங்கள்!” (அந்நூர்: 32)

அவ்வாறு திருமணம் முடித்து வைக்கும் வேளையில் மணமக்களுக்கிடையில் பொருத்தப்பாட்டை அவதானிப்பது அவசியமாகும். நல்லவர்களை நல்லவர்களோடும், கொட்டவர்களை கொட்டவர்களோடும் சோத்து வைப்பதே உத்தமமாகும். அதுவே அவர்களது எதிர்காலத்தில் முரண்பாடுகள் உண்டாவதைத் தடுக்கக் கூடியதாகவும் இருக்கும். அதிலும் குறிப்பாக, நல்லவர்களை நல்லவர்களுடன் சேர்த்து வைப்பதால் அவர்களது நல்ல காரியங்கள் தொடர்வதற்கு உதவியாகவும், ஒருவருக்கொருவர் உற்சாகமளித்து புத்துணர்வுடன் செயற்படுவதற்கும் வழிவகுக்கும்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “மேலும், தூய்மையான பெண்கள் தூய்மையான ஆண்களுக்கும், தூய்மையான ஆண்கள் தூய்மையான பெண்களுக்கும் பொருத்தமுடையவர்களாக இருக்கின்றனர்”. (அந்நூர்: 26)

உண்மையில், எங்களது ஆண்மக்களுக்கு ஸாலிஹான பெண்களைத் தேடிக் கொடுப்பது அவ்வாண்மகனின் வாழ்க்கையில் பல்வேறுபட்ட நலவுகள் உண்டாவதற்குக் காரணமாக அமைகின்றது. ஏனெனில், ஸாலிஹான பெண்ணானவள் கணவனுக்கு விசுவாசமுள்ளவளாகவும், அடிபணிந்து நடக்கக் கூடியவளாகவும், கணவன் வீட்டில் இல்லாத சந்தர்பத்தில் தன்னையும் தனது கணவனின் சொத்துக்களையும் மார்க்க அடிப்படையில் பாதுகாக்கக் கூடியவளாகவும் இருப்பாள்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “எனவே, ஸாலிஹான பெண்கள் தம் கணவனுக்கு விசுவாசமானவர்களாகவும், பணிந்து நடப்பவர்களாகவும், கணவன் இல்லாத போது பாதுகாக்க வேண்டியதை அல்லாஹ் பாதுகாத்ததைக் கொண்டு பாதுகாப்பவளாகவும் இருப்பார்கள்”. (அந்நிஸா: 34)

எனவே, ஒரு பெண் ஸாலிஹான பெண்ணாக இருக்கின்றாளா? என்று பார்ப்பதே எமது கடமை. அப்பெண் சமுகத்தில் எந்தத் தரத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: “மேலும் முஃமினான அடிமைப்பெண் இணைவைக்கக்கூடிய பெண்ணை விடச் சிறந்தவளாக இருக்கின்றாள். அவ்வாறு (இணைவைக்கும் அப்பெண்) உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தாலும் சரியே!” (அல்பகரா: 221)

பொதுவாக மனித சமுதாயத்திற்கு மத்தியில் மணமகள் தேரிவானது பல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. ஒரு சாரார் மணமகளிடம் காணப்படும் சொத்து செல்வத்தையும், மற்றுமொரு சாரார் அவளுடைய குடும்ப அந்தஸ்தையும், பிரிதொரு சாரார் அவளின் அழகையும் இன்னுமொரு சாரார் அவளிடம் காணப்படும் மார்க்கப்பற்றையும் அவதானித்து குறித்த மணமகளைத் தமக்குப் பொருத்தமானவளாகத் தெரிவு செய்கின்றனர். ஆயினும், இத்தெரிவில் மிகச் சிறந்ததும், அருள் பொருந்தியதுமான தெரிவு மார்க்கப்பற்றை அடிப்படையாகக் கொண்ட தெரிவாகும்.

நபியவர்கள் கூறினார்கள்: “பெண்ணானவள் நான்கு நோக்கங்களுக்காகத் திருமணம் செய்யப்படுகின்றாள். (அவை) அவளுடைய செல்வமும், குடும்ப அந்தஸ்தும், அழகும், மார்க்கப் பற்றுமாகும். எனவே, மார்க்கமுடையவளைத் திருமணம் செய்து வெற்றியடைந்து கொள்! உன்னுடைய கரங்கள் மண்ணைச் சேர்ந்து கொள்ளும்!” (புகாரி, முஸ்லிம்)

மேலும், மனிதன் உலகில் பல்வேறுபட்ட செல்வங்களை பலத்த சிரமத்திற்கு மத்தியில் தனதாக்கிக் கொள்கின்றான். அவ்வாறு சம்பாதித்ததை மதிப்புக்குரியதாகவும் பெருமைக்குரியதாகவும் கருதுகின்றான். ஆனாலும், யதார்த்தம் அவ்வாறன்று, மனிதன் உலகில் சாம்பாதித்தவற்றில் மிகச் சிறந்தது ஸாலிஹான மனைவியாவாள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நபியவர்கள் கூறினர்கள்: “உலகம் செல்வமாகும். அதன் செல்வங்களில் மிகச்சிறந்தது ஸாலிஹான பெண்ணாவாள்”. (முஸ்லிம்)

மேலும், ஸாலிஹான பெண்ணானவளே மனித வாழ்வில் சந்தோசத்தின் விலாசமாவாள்.

நபியவர்கள் கூறினார்கள்: “நான்கு விடயங்கள் சந்தோசத்தைச் சார்ந்ததாகும். (அவற்றில் ஒன்று,) ஸாலிஹான மனைவியாவாள். மேலும், நான்கு விடயங்கள் கெடுதியைச் சார்ந்ததாகும் (அவற்றில் ஒன்று,) தீய மனைவியாவாள்”. (அஹ்மத்)

இன்றும், ஸாலிஹான பெண்ணானவள் ஒரு மனிதன் உலகில் தனதாக்கிக் கொள்வதற்கு மிகப் பொருத்தமானவளாக இருக்கின்றாள். நபியவர்களுக்கு தங்கம் வெள்ளி தொடர்பான வசனம் இறங்கிய போது, தோழர்கள் நபியவர்களை விழித்து: “நாங்கள் எச்செல்வத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்?” எனக் கேட்க, “உங்களில் ஒருவர் நன்றி செலுத்தும் உள்ளத்தையும், ஞாபகிக்கும் நாவையும், மறுமை விடயத்தில் உங்களில் ஒருவருக்கு உதவி புரியும் முஃமினான மனைவியையும் எடுத்துக் கொள்ளட்டும்!” என பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் ஜாமிஉ)

எனவே, பொருத்தமில்லாத அளவுகோள்களைக் கைவிட்டு, எமது ஆண்மக்களில் நாம் ஆசைப்படும் நலவுகளை அடைந்திட அவர்களுக்கு ஸாலிஹான துணைவிகளைத் தேடிக் கொடுக்க முயற்சி செய்வோமாக!

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

–    அபூ ஹுனைப்