பெண்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்கு மஹ்ரமான ஆண் துணை அவசியமா?

بسم الله الرحمن الرحيم

ஒரு பெண் மீது ஹஜ் கடமையாவதற்கான நிபந்தனைகளில் ஒன்று அவளுக்குரிய மஹ்ரமைப் பெற்றிருத்தலாகும். இவ்விடயம் ஆல இம்றான் அத்தியாயத்தின் 97ஆம் வசனத்தில் ஹஜ் தொடர்பாகக் கூறப்பட்ட ‘அதற்குச் சென்றுவர யாருக்குச் சக்தி உள்ளதோ” என்ற வாசகத்தில் உள்ளடங்கியிருக்கின்றது. இக்கருத்தை இமாம்களான அஹ்மத், இஸ்ஹாக், அஸ்ஸவ்ரி, ஷாபி, இப்னுல் முன்திர், ஹஸனுல் பஸரி, அந்நஹஇ ரஹிமஹுமுல்லாஹ் போன்றோர் கூறியுள்ளனர்.

மேலும், தற்காலத்தில் ஸவூதி அரேபியாவின் பத்வாக் குழு, இப்னு பாஸ், இப்னு உஸைமீன், முக்பில் அல்வாதிஇ ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோரும் கூறியுள்ளனர்.

இக்கூற்றைக் கூறக் கூடிய அறிஞர்கள் பிரதானமான சில ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள். அதன் நிரலில்…

•   இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபியவர்கள் தனது குத்பாவின் போது பின்வருமாறு கூறக் கேட்டுள்ளேன். ஓர் ஆணும் பெண்ணும் மஹ்ரம் இன்றித் தனித்திருக்க வேண்டம். மேலும், ஒரு பெண் மஹ்ரம் இன்றிப் பிரயாணம் செய்ய வேண்டாம். அப்போது ஒருவர் எழும்பி ‘அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய மனைவி ஹஜ் செய்வதற்காக வெளிக்கிளம்பியுள்ளார். நானோ இன்னின்ன யுத்தங்களில் பங்கேற்பதற்காகப் பெயர் பதிந்துள்ளேன்” என்றார். அதற்கு நபியவர்கள்: ‘போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்!” என்று பணித்தார்கள். (புகாரி முஸ்லிம்)

•   அபூஹுரைரா மற்றும் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹும் அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒரு பெண்மணி மஹ்ரம் இன்றிப் பிரயாணம் செய்ய வேண்டாம். (புகாரி முஸ்லிம்)

இப்படியிருக்க சில அறிஞர்கள் வேறு சில ஆதாரங்களை முன்வைத்து மஹ்ரம் இன்றி ஒரு பெண்ணுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்ல முடியும் என்கிறார்கள். அவர்களின் ஆதாரங்களையும் அவற்றுக்கான சுறுக்கமான விமர்சனத்தையும் காண்போம்.

•   ஹஜ் செய்வதற்கு சக்தி பெறுதல் என்ற விடயத்தை நபியவர்கள் தெளிவுபடுத்தும் போது அதன் மூலம் ஹஜ்ஜுக்குத் தேவையான கட்டிச் சாதனம் மற்றும் வாகன வசதி என்று விளக்கம் கொடுத்துள்ளார்கள் என்றும், மஹ்ரமை இது விடயத்தில் நுழைவிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். ஆயினும், இச்செய்தி பலவீனமானது. அப்படி ஒரு வாதத்திற்கு ஸஹீஹானது என்று எடுத்துக் கொண்டாலும் குறித்த விளக்கம் சக்திபெறுதல் என்ற அம்சத்தில் உள்ளடங்கும் சில விடயங்களுக்கான தெளிவாகவே அமையும். பகரமாக, பூரணமான உள்ளடக்கம் குறித்த விளக்கமாக இது கருதப்படமாட்டாது.

•   நபியவர்கள் கூறியதாக அதீ இப்னு ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘(ஒரு காலம்) நெருங்கிவரும். அக்காலத்தில் ஒரு பெண்மணி ஹீரா என்ற பிரதேசத்தில் இருந்து தனியாக வெளிப்பட்டு கஃபாவைத் தவாப் செய்வாள். (வரும் வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் அஞ்சமாட்டாள்.” (புகாரி) இச்செய்தியைப் பொறுத்தளவில் இது விடயத்தில் தெளிவான முடிவைத்தரக்கூடிய செய்தியாகக் கருத முடியாது. மாற்றமாக, இச்செய்தி எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு நிகழ்வு குறித்துப் பேசுகின்றது. மேலும், குறித்த நிகழ்வு நபியவர்களின் அங்கீகாரத்தைப் பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கமாட்டாது. இப்படி மார்க்கத்தில் எத்தனையோ நிகழ்வுகள் குறித்து நபியவர்கள் அறிவித்திருக்கின்றார்கள். அவை ஒவ்வொன்றும் குறித்த செயலை அனுமதிக்கக் கூடியதாக அமைந்துவிடமாட்டாது. மாற்றமாக, இச்செய்தியில் பிற்பட்ட காலத்தில் பாதுகாப்பான ஒரு சூழல் ஏற்படும் என்பது பற்றியே முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. எனவே, தெளிவில்லாத மூடலான ஆதாரங்களை மையமாக வைத்து இப்படியாகத் தவறான முடிவுகளை முன்வைப்பதை தாம் தவிர்ந்து கொள்ள வேண்டும். இப்னுல் முன்திர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறும் போது: ‘இத்தகையவர்கள் ஹதீஸின் வெளிப்படையான கருத்தை எடுத்துக் கொண்டு சரியான வார்த்தையை விட்டுவிட்டார்கள். மேலும், அவர்களில் ஒவ்வொருவரும் தன்னிடத்தில் எவ்வித ஆதாரமும் இன்றி நிபந்தனையை இட்டுக் கொண்டார்கள்” என்கிறார்கள்.

–    பார்க்க: அல்முங்னி: (5/30), அல்மஜ்மூஉ: (7/86,87), அஷ்ஷரஹுல் மும்திஃ (7/42), பதாவா அல்லஜினா: (11/91) , அல்கிரா லிகாஸிதி உம்மில் குரா: (பக்கம்: 70), பத்ஹுல் அல்லாம்: (2/782,783)

–    தமிழில்: அபூ ஹுனைப்