உழ்ஹிய்யா மாமிசத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்து விநியோகிப்பதற்கு சுன்னாவில் இடமுள்ளதா?

بسم الله الرحمن الرحيم

அஷ்ஷெய்க் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகையில்: “உழ்ஹிய்யாவைப் பொருத்தளவில் அவசியம் அதிலிருந்து வரையறுக்கப்படாத ஓர் அளவு ஸதகாச் செய்யப்பட வேண்டும். அவ்வாறின்றி பெருநாளின் நிமித்தமாக மூன்றில் ஒரு பகுதியும் ஸதகாவுக்காக மற்றொரு மூன்றில் ஒரு பகுதியும் சேமிப்பிற்காக பிரிதொரு மூன்றில் ஒரு பகுதியுமாக மூன்று பகுதிகளாகப் பிரிப்பதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. மாறாக, எந்தவித அளவீடுமின்றி மூன்று பகுதிகளாகப் பிரிக்கின்ற விடயம் மாத்திரம் ஹதீஸில் வந்துள்ளது. நபியர்கள் கூறினார்கள்: ‘உழ்ஹிய்யா மாமிசங்களை சேமித்து வைப்பதை விட்டும் நான் உங்களைத் தடுக்கக்கூடியவனாக இருந்தேன். அறிந்து கொள்ளுங்கள்! (தற்போது) நீங்கள் (அதிலிருந்தும்) சாப்பிடுங்கள்! ஸதகாவும் செய்யுங்கள்! சேமித்தும் வைத்துக் கொள்ளுங்கள்!’ இங்கு நபியவர்கள் அளவீட்டு முறை எதனையும் குறிப்பிடவில்லை என்பது அவதானிக்கத் தக்கதாகும்” என்கிறார்கள். (ஸில்ஸிலதுல் ஹுதா வந்நூர், ஒலிப்பதிவு நாடா இல: 208)

இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகையில்: “உழ்ஹிய்யாவில் இருந்து மூன்றில் ஒரு பகுதியை ஸதகா செய்வது வாஜிபன்று. உங்களுக்கு உழ்ஹிய்யாவில் இருந்து முழு அளவைக் கூடச் சாப்பிடலாம். ஆயினும், அதிலிருந்து சிறிதளவை ஸதகாவாகக் கொடுத்துவிட்டு எஞ்சியதை உங்களுக்கு சாப்பிட முடியும். என்றாலும், மிக ஏற்றமானது நீங்கள் அவற்றிலிருந்து ஸதகாக் கொடுப்பதும், அன்பளிப்புச் செய்வதும், சாப்பிடுவதுமாகும்” என்கிறார்கள்.  (பதாவா நூருன் அலத் தர்ப், ஒலிப்பதிவு நாடா இல: 321)

–    தமிழில்: அபூ ஹுனைப்