உழ்ஹிய்யாவும் அதனை நிறைவேற்றுபவர் கவனிக்க வேண்டிய விடயங்களும் – 03

بسم الله الرحمن الرحيم

கேள்வி: உழ்ஹிய்யாவுடைய நேரம் கடந்ததன் பின்பு அதனை நிறைவேற்றலாமா?

பதில்: அஷ்ஷெய்ஹ் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ‘இந்த விடயத்தில் சரியான கருத்து என்னவெனில், உழ்ஹிய்யாவுடைய நேரம் தவறியது அதனை (ஒருவர்) வேண்டுமென்றே பிற்படுத்தியதன் காரணமாக இருந்தால் பின்பு அதனை நிறைவேற்றுவது அவருக்குப் பயனளிக்காது. மேலும், அதனை நிறைவேற்றுமாறு அவர் ஏவப்படமாட்டார். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘யார் எங்களுடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலைச் செய்கின்றாரோ அது நிராகரிக்கப்படும்” என்று கூறியிருக்கின்றார்கள். அவர் மறதியின் காரணமாக அல்லது, அறியாமையின் காரணமாகப் பிற்படுத்தினால் அல்லது, கால்நடை தப்பி ஓடினால் அவர் அறுப்பு நேரத்திற்கு முன்பாக அதனுடைய நேரம் வரும்வரை அதனைத் தேடுவதில் ஆசையுள்ளவராக இருந்தால், பின்பு நேரம் கடந்த பின் அதனை அவர் பெற்றுக் கொண்டால் இந்நிலையில் அவர் அதனை உழ்ஹிய்யாவாகக் கொடுக்கலாம். ஏனெனில், ஒரு காரணத்திற்காகவே அதனை அவர் நேரத்தைவிட்டும் பிற்படுத்தினார். அது பின்வரும் ஹதீஸைப் போன்று ஆகிவிடும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது: ‘யார் ஒரு தொழுகையை விட்டும் தூங்குகின்றாரோ அல்லது, அதனை மறந்துவிடுகின்றாரோ அது அவருக்கு ஞாபகம் வரும்போது அதனைத் தொழட்டும்! அதைத் தவிர அதற்கு  வேறு பரிகாரம் இல்லை” என்றார்கள். (அஷ்ஷர்ஹுல் மும்திஃ: 7/504)

கட்டாயமில்லாத சுன்னத்தான ஓர் உழ்ஹிய்யாவாக இருந்தால் அதனுடைய நேரம் தவறும் பட்சத்தில் அதனை மீண்டும் நிறைவேற்றுவது அவசியமில்லை. யாராவது அவ்வாறு அந்த உழ்ஹிய்யாவை நிறைவேற்றினால் அது அவருக்குக் கூடுமாகும். அவர் அதனைப் பங்கிட்டால் உழ்ஹிய்யாவுடைய கூலியின்றி ஸதகாவுடைய கூலியே அவருக்கு வழங்கப்படும். இக்கருத்தை ஷாபிஈ மற்றும் அஹ்மத் போன்ற அறிஞர்களின் மத்ஹபைச் சார்ந்தவர்கள் சரி கண்டிருக்கின்றார்கள்.

கேள்வி: உழ்ஹிய்யாக் கொடுக்க முற்படுகையில் அல்லாஹ்வின் பெயர் கூறுவதோடு தக்பீரும் கூற வேண்டுமா?

பதில்: அல்லாஹ்வின் பெயர் கூறுவதோடு தக்பீர் கூறுவது விரும்பத்தக்கதாகும். ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொம்புடைய இரு செம்மறி ஆடுகளை அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறி தக்பீர் கூறினார்கள் என்று அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புஹாரீ: 5565, முஸ்லிம்: 1966)

அல்லாஹ்வின் பெயர் கூறுவதுடன் தக்பீர் கூறுவது விரும்பத்தக்கது என்பது அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடுள்ள ஒரு விடயமல்ல. தக்பீர் கூறாமல் அல்லாஹ்வின் பெயர் மாத்திரம் கூறினாலும் அது செல்லுபடியாகும் என்று இமாம் இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள். (அல்முங்னீ:13/390)

கேள்வி: உழ்ஹிய்யாக் கொடுக்கும் போது ‘அல்லாஹும்ம மின்க வலக, தகப்பல் மின்னீ” என்று கூறலாமா?

பதில்: இவ்வாறு கூறுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உழ்ஹிய்யாக் கொடுக்கும் போது ‘அல்லாஹும்ம மின்க வலக” என்று கூறினார்கள். (அபூதாவூத்: 2795, அல்பைஹகீ: 9/281) இது ஒரு ஹஸனான ஹதீஸாகும்.

கேள்வி: உழ்ஹிய்யாப் பிராணியை அறுக்கும்போது அதனை எவ்வாறு வைத்திருக்க வேண்டும்?

பதில்: ஆடு, மாடு ஆகியவைகளை படுக்க வைத்த நிலையில் அறுப்பது விரும்பத்தக்கதாகும். ஒட்டகத்தை நிறுத்திவைக்கப்பட்டு அதனுடைய இடது கை கட்டப்பட்ட நிலையில் அறுப்பது விரும்பத்தக்கதாகும் என்று அறிஞர்கள் கூறியிருக்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு செம்மறி ஆட்டைக் கொண்டுவருமாறு கூறி, பின்பு அதனைப் படுக்க வைத்து அறுத்தார்கள் என்று ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்: 1967)

கேள்வி: எத்தகைய குறையுள்ள பிராணிகளை உழ்ஹிய்யாவாக வழங்க முடியாது?

பதில்: நான்கு வகையான குறைகள் காணப்படுகின்றன. அவைகளில் ஏதாவது ஒரு குறை ஒரு பிராணியில் காணப்பட்டால் அப்பிராணியை உழ்ஹிய்யா வழங்க முடியாது. அந்த நான்கு குறைகளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் ஹதீஸில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். அவர்கள் கூறினார்கள்: ‘நான்கு வகையான பிராணிகளை உழ்ஹிய்யாக் கொடுக்க முடியாது. அவை குருட்டுத் தன்மை தெளிவுள்ள கண் குருடாகிய பிராணி, நோய் தெளிவாகியுள்ள நோயுள்ள பிராணி, தெளிவான தொழுநோயுடைய பிராணி, மூளை வளர்ச்சி குன்றிய பிராணி ஆகியவைகளாகும்.”

(அஹ்மத்: 4/289, அபூதாவூத்: 2802, நஸாஈ: 4/214-215, திர்மிதீ: 1497, இப்னுமாஜா: 3144, இப்னு ஹிப்பான்: 5919-5922)

இந்த ஹதீஸை இமாம்களான புஹாரீ, அஹ்மத் ஆகியோர்கள் ஸஹீஹ் என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ‘முதலாவதாகக் கூறப்பட்ட நான்கு குறைகளும் உழ்ஹிய்யா செல்லுபடியாகுவதைத் தடுத்துவிடுகின்றன என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளதாக நாம் அறியமாட்டோம்.” (அல்முங்னீ: 13/369-370)

கேள்வி: அரைவாசி அல்லது அதற்கும் அதிகமான அளவு கொம்பு துண்டிக்கப்பட்ட பிராணியை உழ்ஹிய்யாவாக வழங்க முடியுமா?

பதில்: இது விடயமாக அறிஞர்களுக்கு மத்தியில் இரு வகையான கருத்துக்கள் காணப்படுகின்றன.

முதலாவது கருத்து: கொம்பு துண்டிக்கப்பட்ட பிராணியை உழ்ஹிய்யாவாக வழங்க முடியாது. இக்கருத்தை இமாம்களான அந்நஹஈ, அபூயூஸுப், முஹம்மத் இப்னுல் ஹஸன், அஹ்மத் ரஹிமஹுமுல்லாஹ் ஆகியோர் சரிகண்டுள்ளார்கள்.

இவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாக முன்வைக்கின்றார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொம்பு மற்றும் காது துண்டிக்கப்பட்ட பிராணியை உழ்ஹிய்யாவாக வழங்கப்படுவதைத் தடுத்தார்கள். (அஹ்மத்: 1/83)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஜரீ இப்னு கல்ப் அஸ்ஸதூஸீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்ற தரத்தைப் பெற்றிருப்பதன் காரணமாக இந்த ஹதீஸ் ஒரு பலவீனமான ஹதீஸாகும். (அல்இர்வாஃ: 1149)

இரண்டாவது கருத்து: கொம்பு துண்டிக்கப்பட்ட பிராணியை உழ்ஹிய்யாவாக வழங்கலாம். இக்கருத்தை ஸஈத் இப்னுல் முஸய்யிப், ஹஸன், அபூஹனீபா, ஷாபிஈ, மாலிக் ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய இமாம்கள் சரிகண்டிருக்கின்றார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸில் கூறிய நான்கு வகையான குறைபாடுகளிலும் இக்குறை இடம்பெறவில்லை. கொம்பு துண்டிக்கப்படுவது உழ்ஹிய்யாப் பிராணியில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது ஆகிய காரணங்களை இவர்கள் முன்வைக்கின்றார்கள். இக்கருத்தே சரியான கருத்தாகும்.

கேள்வி: இரு கண்களும் குருடாகிய பிராணியை உழ்ஹிய்யாவாக வழங்க முடியுமா?

பதில்: இமாம் இப்னு குதாமா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ‘இரு கண்கள் குருடாகிய பிராணி உழ்ஹிய்யாவுக்கு செல்லுபடியாகாது. ஏனென்றால், ஒரு கண் குருடாகிய பிராணிக்கு வழங்கப்பட்ட தடை இரு கண்கள் குருடாகிய பிராணியையும் விழித்துக் கூறுகின்றது. அதனுடைய குருட்டுத் தன்மை தெளிவாக இல்லாவிட்டாலும் சரியே!” (அல்முங்னீ: 13/371)

இமாம் நவவீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இக்கருத்து அனைத்து அறிஞர்களினதும் ஏகோபித்த கருத்தாகும் என்பதை அவருடைய அல்மஜ்மூஉ (8/404) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அஷ்ஷெய்ஹ் பின்பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ‘இரு கண்கள் குருடாகிய பிராணி ஒரு கண் குருடாகிய பிராணியைவிட மிகக் கடுமையானதாகும். ஹதீஸில் கூறப்பட்ட நான்கு குறைகளைவிடவும் கடுமையான குறைகள் காணப்பட்டால் அது  செல்லுபடியாகாது என்பதே மிக ஏற்றமான அமைப்பாகும்.” (ஸலாதுல் முஃமின்: 2/908)

– இன்ஷா அல்லாஹ் தொடரும்.

– தொகுப்பு: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்