மீலாத் விழாவை சரிகாண்பவர்களின் வாதங்களும் அதற்கான அறிவுபூர்வமான பதில்களும் – 01

بسم الله الرحمن الرحيم

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட கொண்டாடாத அவரது பிறந்த நாளைக் கொண்டாடும் அசத்தியவாதிகள் அவர்களது இந்நிலைப்பாட்டை சரிகாண்பதற்காக வேண்டி அல்குர்ஆனிலிருந்தும் அஸ்ஸுன்னாவிலிருந்தும் ஒரு சில ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள். அவ்வாதாரங்களை முறையற்று விளங்கியதின் காரணமாக அவர்கள் இந்நிலைப்பாட்டில் தொடர்ந்தும் நிலைத்திருக்கின்றார்கள். மேலும், அவர்கள் ஒரு சில புத்தி ரீதியான வாதங்களையும் முன்வைத்து அவர்களது கருத்தை வலுப்படுத்தியுள்ளார்கள்.

அவர்கள் முன்வைக்கும் வாதங்களில் மிகப் பிரதானமான வாதங்களை நாம் தெரிவுசெய்து அதற்கான அறிவுபூர்வமான பதில்களையும் குறிப்பிடுகின்றோம்.

முதல் வாதம்:

அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக்கொண்டு மீலாத் விழாவை சரிகாண்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் இஸ்லாத்தில் நல்ல வழிமுறையை வழிமுறையாக ஆக்குகின்றாரோ அவருக்கு அதன் கூலியும் மறுமை நாள் வரைக்கும் அதனைச் செய்பவர்களின் கூலியும் உண்டு.

–     முஸ்லிம்

மீலாத் விழா என்பது ஒரு நல்ல வழிமுறையாகும். ஆகவே, அதனைக் கொண்டாடுபவர்கள் அனைவருக்கும் கூலி கிடைக்கின்றது என அவர்கள் கூறுகின்றார்கள்.

இதற்கான மறுப்பு:

யார் இஸ்லாத்தில் நல்ல வழிமுறையை வழிமுறையாக ஆக்குகின்றாரோ அவருக்கு கூலி கிடைக்கும் என்று கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான் அனைத்து பித்அத்களும் வழிகேடாகும் என்றும் கூறினார்கள். ஆகவே, நல்ல வழிமுறை என்பதற்காக வேண்டி நாம் பித்அத்களையெல்லாம் உருவாக்க முடியாது. அவ்வாறு யாராவது உருவாக்கினால் அது வழிகேடாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓர் ஆதாரத்தை நாம் விளங்கும்போது அதன் காரணங்களையும் நாம் கண்டறிய வேண்டும். ஆகவே, இந்த ஹதீஸை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அக்காரணத்தைத் தெரிந்து கொள்வதன் மூலம் நாம் இந்த ஹதீஸைக்கொண்டு மீலாத் விழாவை சரிகாணமுடியாது என்பதை விளங்கிக்கொள்ளலாம்.

முதர் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு சில ஸஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் தேவையுடையவர்களாக வந்தார்கள். அப்போது அவர்கள் ஸஹாபாக்களுக்கு ஸதகாவின் சிறப்பைத் தூண்டினார்கள். ஒரு ஸஹாபி வெள்ளி நிறைந்த ஒரு பையை அவர்களுக்கு மத்தியில் வைத்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: யார் இஸ்லாத்தில் ஒரு நல்ல வழிமுறையை வழிமுறையாக ஆக்குகின்றாரோ அவருக்கு அதன் கூலியும் மறுமை நாள் வரைக்கும் அதனைச் செய்பவரின் கூலியும் உண்டு.

ஆகவே, இந்த ஹதீஸின் மூலம் நாம் மீலாத் விழாவை சரிகாணமுடியாது என்பதை அதனுடைய காரணத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நல்ல வழிமுறையென்பதை ஸதாகவைத்தான் குறிப்பிட்டுள்ளார்கள். ஸதகா குறித்து அதிகமான ஆதாரங்கள் காணப்படுகின்றன. ஆனால், மீலாத் விழாவுக்கு ஆதாரங்கள் காணப்படவில்லை. எனவே, நாம் நல்ல வழிமுறையென்று மார்க்கத்தின் பெயரால் ஏதாவது ஒன்றை உருவாக்கினால் அதற்கான அடிப்படை ஆதாரங்கள் காணப்பட வேண்டும். வெள்ளி நிறைந்த பையை முன்வைத்த ஸஹாபி ஆரம்பமாக ஸதகா விடயத்தில் முந்திக்கொண்டார். ஆகவே, அவர் இஸ்லாத்தில் ஒரு நல்ல வழிமுறையை உருவாக்கியுள்ளார். பின்பு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதன் சிறப்பை அவருக்கு எடுத்துக்காட்டியுள்ளார்கள்.

ஆகவே,  மறைந்துபோன ஒரு வழிமுறையை உயிர்ப்பிக்கின்றவர்கள் அல்லது ஒரு வழிமுறையை ஆரம்பமாகச் செய்கின்றவர்கள் குறித்துதான் இந்த ஹதீஸின் விளக்கம் அமைகின்றதே தவிர மார்க்கத்தில் இல்லாத ஒன்றை நாம் நல்ல வழிமுறையாக உருவாக்க முடியாது என்பதை நல்ல முறையில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு நல்ல விடயம் என்ற பெயரில் நாம் விரும்பியவற்றையெல்லாம் மார்க்கம் என்ற பெயரில் உருவாக்கினால் மார்க்கம் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது என்ற கொள்கையை பொய்ப்பிக்கின்ற நிலை ஏற்படும். அல்லாஹுத்தஆலா ஹிஜ்ரி பத்தாம் ஆண்டு அரபா திடலில் இம்மார்க்கத்தை எமக்கு பூர்த்தியாக்கினான் என்பது யாவரும் அறிந்த விடயமே.

இரண்டாவது வாதம்:

பின்வரும் அல்குர்ஆன் வசனத்தைக் கொண்டு அவர்கள் மீலாத் விழாவை சரிகாண்கிறார்கள். அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: இது அல்லாஹ்வின் அருட்கொடையினாலும் அவனது கருணையினாலும் உள்ளதாகும். எனவே, அவர்கள் இதைக்கொண்டு மகிழ்வடையட்டும்.

–     யூனுஸ்: 56

இந்த வசனத்தில் அல்லாஹ் அவனது கருணையைக் கொண்டு மகிழ்வடையுமாறு ஏவியிருக்கின்றான். அவனது கருணை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாவார்கள். எனவே, நாம் மீலாத் விழாவைக் கொண்டாடி அவர்களைக் கொண்டு மகிழ்வடைகின்றோம் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

இதற்கான மறுப்பு:

இந்த வாதத்திற்கு மூன்று முறைகளில் மறுப்பளிக்கின்றோம்.

முதலாவதாக:

நான் ஆரம்பத்தில் கூறியதைப்போன்று ஆதாரங்களை இவர்கள் சரியான முறையில் விளங்காததின் காரணமாக இதுபோன்ற பித்அத்களை இவ்வாதரங்களை முன்வைத்து சரிகாண்கிறார்கள். எந்தவோர் ஆதாரத்தையும் நாம் எமது ஸலபுகள் வழிமுறையிலே விளங்க வேண்டும். ஆகவே, எந்தவொரு தப்ஸீர் கலை அறிஞர்களும் இவ்வசனத்தில் கூறப்பட்ட கருணைக்கு அதன் மூலம் நாடப்பட்டது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்று விளக்கமளிக்கவில்லை.

இரண்டாவதாக:

இந்த வசனத்தில் கருணை என்பதன் மூலம் நாடப்பட்டது என்னவென்பதை இந்த வசனத்திற்கு முந்திய வசனம் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹுத்தஆலா அவ்வசனத்தில் கூறுகின்றான்: மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும் உள்ளங்களில் உள்ளவற்றுக்கு நிவாரணியும் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும் கருணையும் நிச்சயமாக வந்துவிட்டது.

–     யூனுஸ்: 57

இவ்வசனத்தில் அல்லாஹ் குர்ஆனைப்பற்றிக் குறிப்பிடுகின்றான். எனவே, கருணையின் மூலம் நாடப்பட்டது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களல்ல.

மூன்றாவதாக:

இவ்வசனத்தில் இடம்பெற்ற அருட்கொடையின் மூலம் நாடப்பட்டது குர்ஆன் என்றும், கருணையின் மூலம் நாடப்பட்டது இஸ்லாம் என்றும் அபூஸஈத் அல்ஹுத்ரீ மற்றும் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹும் ஆகிய ஸஹாபக்கள் விளக்கமளித்துள்ளார்கள். – அல்குர்துபி – எனவே, அவர்களின் விளக்கமே குறித்த வசனத்திற்கு முதன்மையானது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

–     அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *