ஃபஜ்ர் தொழுகையை தவறவிடுவதால் உண்டாகக்கூடிய நஷ்டங்கள் – 02

بسم الله الرحمن الرحيم

5. இரவு பூராகவும் நின்று வணங்கிய கூலியை இழக்க நேரிடும். நபியவர்கள் கூறினார்கள்: “யார் இஷாத் தொழுகையில் ஜமாஅத்துடன் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரவின் அரைவாசிப் பகுதி நின்று வணங்கிய கூலி கிடைக்கும். மேலும், யார் இஷாத் தொழுகையையும் ஃபஜ்ர் தொழுகையையும் ஜமாஅத்தாகத் தொழுகின்றாரோ அவருக்கு இரவு பூராகவும் நின்று வணங்கிய கூலியைப் போன்ற ஒன்று கிடைக்கும்.” (திர்மிதி)

6. மலக்குகளை சந்திக்கின்ற வாய்ப்பும் எமது பெயர் அவர்களுடைய பதிவேடுகளில் பதியப்படுகின்ற வாய்ப்பும் கைநழுவிப் போய்விடும். நபியவர்கள் கூறினார்கள்: “இரவினுடைய மலக்குகளும் பகலினுடைய மலக்குகளும் தொடராக உங்களை கண்காணித்து வருகின்றார்கள். அவர்கள் ஸுபஹ் தொழுகையின் போதும் அஸர் தொழுகையின் போதும் ஒன்றிணைவார்கள். பின்னர் உங்களுடன் இரவுப் பொழுதைக் கழித்த மலக்குகள் மேல்நோக்கிச் செல்வார்கள். அப்போது அல்லாஹுத்தஆலா அவர்களை நோக்கி – அவன் அனைத்தையும் பற்றி மிக அறிந்தவனாக இருக்க – நீங்கள் என்னுடைய அடியார்களை எப்படியான நிலையில் அடைந்து கொண்டீர்கள்? எனக்கேட்பான். அதற்கு அவர்கள்: நாங்கள் அவர்களை தொழக்கூடிய நிலையில் விட்டுவிட்டு வந்தோம். மேலும், அவர்கள் தொழுக்கூடிய நிலையில் நாங்கள் அவர்களை அடைந்தோம் என்பார்கள்.” (புகாரி)

7. மறுமை நாளில் ஒளியை இழக்க நேரிடும். நபியவர்கள் கூறினார்கள்: “இரவு நேரத்தில் பள்ளிவாசலை நோக்கி நடந்து வரக்கூடியவர்களுக்கு மறுமை நாளில் பூர்த்தி மிக்க ஒளியைக்கொண்டு நன்மாறாயம் கூறுவீராக!” (பத்ஹுல் பாரி)

8. உலகிக்கும் அதில் உள்ளவற்றிக்கும் நிகரான கூலியைப் பெற்றுத்தரக்கூடிய காரியத்தை தவறவிட்டவர்களாக ஆகிவிடுவோம். நபியவர்கள் கூறினார்கள்: “ஃபஜ்ருடைய – சுன்னத்தான – இரு ரக்அத்துகள் உலகம் மற்றும் அதில் உள்ளவற்றை விடவும் மிகச் சிறந்ததாக இருக்கும்.” (முஸ்லிம்) இது ஃபஜ்ருடைய சுன்னத்தான தொழுகைக்கு இருக்கின்ற கூலி! இக்கூலியே இவ்வளவு பெருமதி மிக்கதாக இருக்கும் போது ஃபஜ்ர் தொழுகைக்கு இருக்கின்ற கூலி எவ்வளவு பெரிதாக இருக்கும் என்பதை சற்று சிந்தனை செய்து பாருங்கள்!

இன்ஷா அல்லாஹ் தொடரும்.

அபூ ஹுனைப் ஹிஷாம் (ஸலபி, மதனி)