ஃபஜ்ர் தொழுகையை தவறவிடுவதால் உண்டாகக்கூடிய நஷ்டங்கள் – 03

بسم الله الرحمن الرحيم

9. பல நலவுகள், அபிவிருத்திகள் மற்றும் நற்கூலிகள் போன்றன கைகூடாமல் போய்விடும். நபியவர்கள் கூறினார்கள்: “மனிதர்கள் இஷா தொழுகையில் இருக்கின்ற நலவையும் ஃபஜ்ர் தொழுகையில் இருக்கின்ற நலவையும் அறிவார்களென்றால் அவற்றுக்கு துவண்டு துவண்டாவது போய் சேருவார்கள்.” (ஸஹீஹுல் ஜாமிஉ)

10. அன்றைய நாள் முழுவதும் சோம்பேறித்தனம் மிக்கதாகக் காணப்படும். நபியவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தூங்கச் செல்கின்ற போது ஷைத்தான் அவரின் பிடறிப் புறத்தில் மூன்று முடிச்சுக்களை இடுவான். உனக்கு இன்னும் இரவு நீளமாக இருக்கிறது என்று கூறியவனாக அவற்றின் மீது அடித்துக் கொண்டிருப்பான். அப்போது அவர் தூக்கத்தைவிட்டு எழுந்து அல்லாஹ்வை ஞாபகப்படுத்தினால் அவருடை ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பின்னர், அவன் வுழூச் செய்தால் அடுத்த முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. அதற்குப் பிறகு, அவர் தொழுகையில் ஈடுபட்டால் இறுதி முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. அதன் காரணமாக அவர் உட்சாகமானவராகவும் நல்லுள்ளம் படைத்தவராகவும் காலைப் பொழுதை அடைவார். அவ்வாறல்லாமல் ஒருவர் (தாமதித்து) கண்விழித்தால் மேசமான உள்ளமுடையவராகக் காலைப் பொழுதை அடைவார்.” (புகாரி, முஸ்லிம்)

11. அபிவிருத்திற்குரிய சிறந்த நேரத்தை இழந்தவனாகக் கருதப்படுவான். ஏனெனில், காலைப் பொழுதானது அபிவிருத்திற்குரிய நேரமாகும். “அல்லாஹ்வே! என்னுடைய உம்மத்தினருக்கு காலைப்பொழுதில் அருள் செய்வாயாக!” என்று நபியவர்கள் இந்த உம்மத்திற்காகப் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.

அந்த அடிப்படையில், இமாம் இப்னுல் கையிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “ஸுப்ஹ் நேரத்தில் தூங்குவது ரிஸ்கை தடை செய்துவிடும்! ஏனெனில், அந்நேரம் ரிஸ்க்கள் பகிர்ந்தளிக்கப்படும் நேரமாகும்.”

மேலும், இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் தனது மகன் ஸுப்ஹுடைய வேளையில் தூங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். அப்போது அவர்கள் தனது மகனை நோக்கி: “ரிஸ்க்கள் பகிர்ந்தளிக்கப்படும் நேரத்திலா நீ தூங்கிக் கொண்டிருக்கிறாய்!? எழுந்து விடு!” என்று கூறினார்கள்.

12. ஷைத்தான் காதுகளில் சிறுநீர் கழிக்கின்ற சந்தர்ப்பம் உண்டாகும். இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: “நபியவர்களிடத்தில் காலைப் பொழுதை அடையும் வரை உறங்கிய நபர் குறித்து சொல்லப்பட்ட போது: அம்மனிதனானவன், இரு காதுகளிலும் ஷைத்தான் சிறுநீர் கழித்தவனாவான்” என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

எனவே, கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! நாம் சுட்டிக்காட்டிய நஷ்டங்கள் எம்மைச் சேராதிருக்க இனிவரக்கூடிய காலங்களில் ஃபஜ்ர் தொழுகையை கண்ணும் கருத்துமாக தொழுதிட முயற்சி செய்வோமாக!

–    அபூ ஹுனைப் ஹிஷாம் (ஸலபி, மதனி)