ரஜப் மாதத்தின் பித்அத்கள்

بسم الله الرحمن الرحيم

முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரசித்தி பெற்றுள்ள அவர்கள் மார்க்கமாக கருதி வருகின்ற ஒரு விடயமே ரஜப் மாதத்தின் சிறப்புக்களும் அதில் அமல் செய்வதின் சிறப்புக்களுமாகும். அல்லாஹ்வால் கண்ணியப்படுத்தப்பட்ட மாதங்கள் நான்காகும். அவை: தொடர்ந்தேர்ச்சியாக வரக்கூடிய துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் மாதங்களும் மற்றும் ரஜப் மாதமுமாகும். இது தவிர வேறு எந்த சிறப்புக்களும் ரஜப் மாதத்திற்கு இல்லை.

ஆனால், முஸ்லிம்களில் சிலர் சில இட்டுக்கப்பட்ட ஹதீஸ்களையும் பலவீனமான ஹதீஸ்களையும் ஆதாரமாகக் கொண்டு இம்மாதத்திற்கு பல சிறப்புக்கள் இருப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளனர். மேலும், ஏனைய மாதங்களில் புரியாத விஷேட வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.

அல்ஹாபிள் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: ரஜப் மாதத்தின் சிறப்பு, அதில் நோன்பு நோற்றல், அதில் சில நாட்கள் குறிப்பாக நோன்பு நோற்றல், மேலும், அதில் மாத்திரம் குறிப்பாக்கப்பட்ட இரவுத்தொழுகை ஆகிய விடயங்களில் ஆதாரம் பிடிப்பதற்குத் தகுதியான எந்த ஸஹீஹான ஹதீஸும் இடம்பெறவில்லை.

மேலும், அவர் ரஜப் மாதம் குறித்து வரக்கூடிய ஹதீஸ்களை பலவீனமானவை மற்றும் இட்டுக்கட்டப்பட்டவை என்று இரண்டு வகைகளாகப் பிரித்துள்ளார். அதனடிப்படையில் அவர் ரஜப் மாதம் குறித்து வரக்கூடிய பதினொரு பலவீனமான ஹதீஸ்களையும் இட்டுக்கட்டப்பட்ட இருபத்தி ஒரு ஹதீஸ்களையும் ஒன்று சேர்த்திருக்கின்றார்.

ரஜப் மாதம் குறித்து வரக்கூடிய சில பொய்யான மற்றும் பலவீனமான ஹதீஸ்களை இங்கு குறிப்பிடுகின்றோம்.

1. சுவர்க்கத்தில் ஓர் ஆறு உண்டு, அதன் பெயர் ரஜபாகும். இது பலவீனமான ஹதீஸாகும்.

2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜப் மாதம் வந்தால், எனது இறைவனே எங்களுக்கு ரஜப் மற்றும் ஷஃபான் மாதத்தில் அபிவிருத்தி செய்வாயாக. இன்னும், எங்களுக்கு ரமழான் மாதத்தை அடையச்செய்வாயாக என்று கூறுவதாக இடம் பெற்ற ஹதீஸும் பலவீனமானதாகும்.

3. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமழானுக்குப் பின்பு  ரஜப் மற்றும் ஷஃபானைத்தவிர வேறு தினங்களில் நோன்பு நோற்கவில்லை. இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

4. ரஜப் அல்லாஹ்வுடைய மாதமாகும். இந்த ஹதீஸ் பொய்யானதாகும்.

5. ஏனைய மாதங்களைவிட ரஜப் மாதத்திற்கு சிறப்பு உள்ளதாக வரும் ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாகும்.

6. ரஜப் மாதத்தின் நாட்கள் ஆறாவது வானத்தின் வாசல்களில் எழுதப்பட்டுள்ளன. இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஒரு பொய்யன் இருக்கின்றான்.

7. ரஜப் மாதத்தின் முதலாவது இரவில் தொழுவதின் சிறப்பு குறித்து வரக்கூடிய ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாகும்.

8. ரஜப் மாதம் இருபத்தி ஏழாம் தினத்தில் நான் நபியாக அனுப்பப்பட்டேன். இதன் அறிவிப்பாளர் வரிசை மறுக்கப்பட்டதாகும்.

இன்னும், பல செய்திகள் இது குறித்து இடம்பெற்றுள்ளன. அவைகளில் ஒன்று கூட சரியான ஹதீஸாக இடம்பெறவில்லை.

அல்இஸ்ராஃ, அல்மிஃராஜ் – நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இராப்பயணம் மற்றும் விண்ணுலகப் பயணம் – இடம்பெற்றது ரஜப் மாதத்திலா?

அபூஷாமா என்ற அறிஞர் அல்பாஇஸ் அலா இன்காரில் பிதஇ வல்ஹவாதிஸ் என்ற தன்னுடைய நூலில் இஸ்ரா ரஜப் மாதத்தில் நடைபெறவில்லை என்று குறிப்பிடுகின்றார்.

சில கதை கூறும் வழக்கமுடையவர்கள் இஸ்ரா ரஜப் மாதத்தில் நடைபெற்றது என்று கூறியிருக்கின்றார்கள். இது ஹதீஸ் கலை அறிஞர்களிடத்தில் பொய்யான ஒரு தகவலாகும்.

அபூ இஸ்ஹாக் அல்ஹர்பீ என்ற அறிஞர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விண்ணுலகப் பயணத்தை ரபீஉல் அவ்வல் இருபத்தி ஏழாம் தினத்தில் மேற்கொண்டதாகக் கூறியுள்ளார்.

இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் இஸ்ரா மிஃராஜுடைய இரவு குறித்து அது எம்மாத்தில் இடம்பெற்றது என்பதில் அறியப்பட்ட ஆதாரங்கள் இடம்பெறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ரஜப் மாதத்தில் நடைபெறும் சில பித்அத்கள்

இம்மாதத்தில் எந்தவித ஆதாரமும் இல்லாத நம்பிக்கை ரீதியான மற்றும் செயல் ரீதியான அதிகமான பித்அத்களை செய்து கொண்டிருக்கின்றனர். அவைகளில் சிலவற்றை அறிந்து கொள்ளுங்கள்:

1. அதீரா என்று அழைக்கப்படக்கூடிய அறுத்துப் பலியிடல் முறையைச் செய்கின்றனர். இது ஜாஹிலிய்யா மக்களிடம் காணப்பட்ட அறுத்துப் பலியிடலாகும்.

அபூ உபைதா என்பவர் கூறுகிறார்: அதீரா என்பது ரஜப் மாதத்தின் அறுத்துப் பலியிடலாகும். ஜாஹிலிய்யாக் காலத்தில் ரஜப் மாதத்தில் அம்மக்கள் இவ்வாறு அறுத்துப் பலியிடுவார்கள். அதைக் கொண்டு அவர்கள் அவர்களுடைய சிலைகளின் பக்கம் நெருங்குவார்கள்.

2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரஜப் மாதத்தின் இருபத்தி ஏழாம் தினத்தில் மிஃராஜ் பயணம் மேற்கொண்டதாக நம்பிக்கை வைத்தல். மேலும், இதற்காக வேண்டி விழாக்களையும் கொண்டாடுகின்றார்கள். இது இரண்டு விதத்தில் பிழையானது என்பதை நிரூபிக்கலாம்.

முதலாவது: இத்தினத்தில்தான் மிஃராஜ் பயணம் நடைபெற்றது என்பது உறுதியான ஒரு தகவல் அல்ல. மிஃராஜ் பயணம் எந்த வருடத்தில் மற்றும் எந்த மாதத்தில் நடைபெற்றது என்பதிலேயே வரலாற்றாசிரியர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு இருக்கின்றது. எனவே, எவ்வாறு மிஃராஜுக்கு ஒரு தினத்தை நாம் குறிப்பாக்கலாம்?

இரண்டாவது: மிஃராஜ் இத்தினத்தில் நடைபெற்றிருந்தாலும் மார்க்கத்தில் அதனைக் கொண்டாடுவதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. மேலும், இக்கொண்டாட்டத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உதவி தேடுதல், பித்அத்தான துஆக்கள் போன்ற மார்க்கத்திற்கு முரணான அம்சங்களும் காணப்படுகின்றன.

3. ரஜப் மாததின் முதலாவது ஜும்ஆத் தினத்தில் ஸலாதுர் ரகாஇப் என்ற தொழுகையைத் தொழுதல். இது குறித்து வரக்கூடிய ஹதீஸ்கள் பலவீனமானவைகளாகும்.

4. ரஜப் மாதத்தில் விஷேட நோன்புகளை நோற்றல்.

5. குறிப்பாக ரஜப் மாத்தில் மாத்திரம் தர்மம் புரிதல். அதற்குத் தனிச் சிறப்பு உள்ளதாக நம்பிக்கை வைத்தல்.

6. ரஜப் மாத்தில் மாத்திரம் விஷேட உம்ராவில் ஈடுபடுதல். இதற்கு அல்உம்ரதுர் ரஜபிய்யா என்று கூறப்படும்.

இன்னும், சில பித்அத்களை இபாதத்தாக அதிகமானவர்கள் செய்கின்றனர். அனைத்தும் ஆதாரமில்லாத செயல்களாகும்.

எனவே, ஒரு முஸ்லிமுக்கு நபிவழியைப் பின்பற்றுவதுதான் கடமையாகும். மார்க்கம் என்ற பெயரில் பித்அத்களைப் புரிவது ஒரு முஸ்லிமுக்குத் தகுதியான ஒன்றல்ல.

–           அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்